டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை நேற்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இந்த தீவிரவாதிகள், பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களான லஷ்கர்- இ- தொய்பா, ஜெய்ஸ்- இ- முகமது ஆகியவற்றை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களில் ஐந்து, ஆறு பேர் ஏற்கனவே டெல்லிக்குள் ஊடுருவி விட்டதாக உளவுத்துறை கூறியுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள், சாதாரண ரெயில் நிலையங்கள், சேனா பவன் உள்ளிட்ட இடங்களை தகர்க்கும் நோக்கத்துடன் இந்த தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்த டெலிபோன் அழைப்புகளை இடைமறித்து கேட்டபோது, இந்த பயங்கர சதித்திட்டம் தெரிய வந்ததாக உளவுத்துறை கூறியுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லி முழுவதும் முழு உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் ஆங்காங்கே ரோந்து சுற்றி வருகிறார்கள். வாகன பரிசோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி, மும்பை, பெங்களூர், ஆமதாபாத் போன்ற நகரங்களும் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில், போலீசார் தயார்நிலையில் உள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு, பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள், மும்பையில் பயங்கர நாசவேலையை நிகழ்த்தினர்.
266 பேரை பலிகொண்ட அந்த தாக்குதலுக்கு பிறகும், மும்பை, டெல்லி ஐகோர்ட்டு போன்ற இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புதிய தாக்குதல் திட்டம் தெரிய வந்திருப்பதால், பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
Post a Comment