2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு - ஏர்செல் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என சிபிஐ உறுதி கூறியுள்ளது.
தயாநிதிமாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் நடந்த முறைகேடு பற்றியும் விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக ஏர்செல் முன்னாள் இயக்குனர் சிவசங்கரன் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், "ஏர்செல் நிறுவனத்துக்கு கூடுதல் ஏரியாவுக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தபோது அதன் மீது முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தினார். ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட பிறகுதான் லைசென்ஸ் வழங்கினார். இதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட்டில் முதலீடு செய்தது," என்று குற்றம்சாட்டினார்.
இந்த பிரச்சினையில் தனக்கு தயாநிதிமாறனும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் கொலை மிரட்டல்கள் விடுத்தனர் என்றும் சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார்.
இந்த புகார்களை தொடர்ந்து தயாநிதி மாறன் பதவி விலகினார். அவரிடமும், கலாநிதி மாறன் மற்றும் மேக்சிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ நிறுவன சேர்மன் ரால்ப் மார்ஷல் ஆகியோரிடமும் சி.பி.ஐ. பல மணி நேரம் விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களை திரட்டியது. கடந்த வியாழக்கிழமை ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சாதாரண வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 30-ந்தேதி (நேற்று) முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்படும் என்றும் சிபிஐ தெரிவித்தது.
ஆனால் பல்வேறு ஆதாரங்களை இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நேற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வில்லை.
வருகிற 10-ந்தேதி அல்லது அதற்கு முன் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதல் தகவல் அறிக்கையில் தயாநிதிமாறன், கலாநிதி மாறன், ஆஸ்ட்ரோ சேர்மன் ரால்ப் மார்ஷல் மற்றும் சிலரது பெயர்கள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.
மேக்சிஸ் நிறுவனத்தை இலங்கை தொழில் அதிபர் அனந்தகிருஷ்ணன் நடத்தி வருகிறார். இவர் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளையும், சிந்தியா செக்யூரிட்டிஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் 24 சதவீத பங்குகளையும் வாங்கியது.
தயாநிதிமாறன் நிர்ப்பந்தத்தின் பேரில் ஏர்செல் பங்குகள் கைமாறிய தாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. ஏர்செல் நிறுவனம் கைமாறியதும் அதற்கு கூடுதலாக 14 ஏரியாக்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களையும் சி.பி.ஐ. திரட்டி உள்ளது.
எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதும், அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கும் எனத் தெரிகிறது.
Post a Comment