அன்னா ஹசாரே தன் குறிக்கோளிலிருந்து விலகிச் சென்று கொண்டிருப்பதாக அவரது குழுவிலிருந்து சமீபத்தில் விலகிய ராஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
வலுவான ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம், போராட்டம் என பரபரப்பு கிளப்பியவர் அன்னா ஹசாரே. இவரது குழுவுக்கு டீம் அன்னா என்று பெயரிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் பெரிய அளவில் பொதுமக்களால் பாராட்டப்பட்ட இந்த ஹஸாரே மற்றும் அவரது குழுவுக்கு இப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தக் குழுவில் உள்ள பலரும் அதிகார முறைகேடுகளில் பல்வேறு தருணங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தங்களைப் பற்றி வெளிவரும் தகவல்கள், விமர்சனங்களால் நிதானமிழந்து பேச ஆரம்பித்துள்ளது டீம் அன்னா. அரசியல்வாதிகளையே மிஞ்சும் அளவுக்கு இந்த டீம் அன்னா அரசியல் செய்யவும் ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி இருவரும் அன்னாவின் நோக்கத்தைக் களங்கப்படுத்தி வருவதாகவும், இவர்களை டீம் அன்னாவிலிருந்து விலக்க வேண்டும் என்றும் அன்னா ஆதரவாளர்களே கோர ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே, ஹஸாரே காங்கிரசுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அவரது குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துவிட்டது. இதனால் அவரது குழுவிலிருந்து ராஜேந்தர் சிங் மற்றும் ராஜகோபால் ஆகிய இரு முக்கிய உறுப்பினர்கள் விலகிவிட்டனர்.
அர்விந்த் கேஜ்ரிவால்தான் அன்னாவை இயக்குவதாக இவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இவர்களில் அன்னா ஹஸாரேவுக்கு ராஜேந்தர் சிங் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், "ஊழலுக்கு எதிராகப் புறப்பட்ட அன்னா ஹஸாரேயும் அவர் குழுவினரும் கடைசியில் ஒரு ஊழல்வாதியைத்தான் ஹிஸார் தொகுதியில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.
ஹிசார் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை ஹசாரே ஆதரிக்க முடிவு செய்த நேரத்தில், நான் அப்போது கென்யாவில் இருந்தேன். அந்த நேரத்தில், நான் இங்கு இருந்திருந்தால் ஹசாரேவை தடுத்திருப்பேன்
ஊழல் ஒழிப்பிற்காக துவங்கிய ஹசாரே துவக்கிய குழு, ஊழலில் திளைத்துவரும் வேட்பாளரை ஆதரித்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஹிசார் இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதன் மூலம், தாங்களும் அரசியல்வாதிகள் என்பதை ஹசாரே குழு சொல்லாமல் சொல்லி வருகிறது.
இதன் மூலம் தன் குறிக்கோளிலிருந்து விலகிப் போயுள்ளார் அன்னா ஹஸாரே.
இவரது குழுவில், அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படும் வேற்றுமைகளை விட அதிகளவில் வேற்றுமைகள் உள்ளன.
அதேபோல், அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண் பேடிவின் செயல்பாடுகள் மூர்க்கத்தனமாக உள்ளன. இவர்களால் ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கே அவமானம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
குழுவைக் கலைத்துவிடுங்கள் - உறுப்பினர் கடிதம்:
இதற்கிடையே, தற்போது உள்ள கூட்டுக்குழுவை கலைத்து, அதிக உறுப்பினர்கள் இடம்பெறும் வகையிலான புதிய குழுவை அமைக்குமாறு, அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர் குமார் விஸ்வாஸ், அன்னா ஹசாரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அண்ணா ஹசாரே எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபடுபவர்களிடம் இருந்து வரும் தாக்குதல்களை அண்ணா ஹசாரே குழுவினர் எதிர்கொள்ளும் முறை கவலை அளிப்பதாக உள்ளது என அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நேரத்தை செலவிடுவதன் மூலம் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கான நேரத்தை ஹசாரே குழு இழந்துவருகிறது என விஸ்வாஸ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் ஹெக்டே பங்கேற்கவில்லை:
நாளை காஜியாபாத்தில், அன்னா குழுவின் கூட்டுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. மவுன விரதம் மேற்கொண்டிருப்பதனால், தன்னால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று அன்னா ஹசாரே அறிவித்துள்ள நிலையில், குழுவின் மூத்த உறுப்பினரான சந்தோஷ் ஹெக்டேவும் இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
அவரிடம் குமார் விஸ்வாஸின் கடிதம் குறித்துக் கூறியபோது, 'வெரி குட், நல்ல யோசனை' என்று கூறினார்.
ஹஸாரே வராததால் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டுக்குழு கூட்டத்தில், அன்னா குழுவினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பிரசாந்த் பூஷன் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இரண்டு குழுக்கள்:
இந்த விவாதத்துக்குப்பின் அண்ணா ஹசாரேவின் உயர்நிலைக் குழு விரிவுபடுத்தப்படக்கூடும் அல்லது மாற்றி அமைக்கப்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அண்ணா ஹசாரேவின் அதிகாரப்பூர்வ வலைப்பூ பதிவர் ராஜூ பருலேகர் கூறுகையில், உயர்நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ள சில உறுப்பினர்கள் சுயநலத்துடன் செயல்படுவதால் எழுந்துள்ள நிலைமையை சமாளிக்க உயர்நிலைக் குழு விரிவுபடுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
புதிய கட்டமைப்பின்படி, குழு இரண்டாகப் பிரிக்கப்படும் என்றும் ஒரு குழு முக்கிய முடிவுகளை எடுக்கும் என்றும் தெரிகிறது.
Post a Comment