ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதில் தமிழக அரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரும் அளித்த கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசு தரப்பில் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த பதில் மனுவில், 3 பேரின் தூக்கு தண்டனையும் ரத்து செய்வது குறித்த எல்லா கேள்விகளுக்கும், 'கருத்து கூற விரும்பவில்லை' என்றே பதிலளித்துள்ளது.
மேலும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன்மூலம் 3 பேரையும் தூக்கில் போடுமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது தெரிகிறது. தமிழக அரசின் இந்த முடிவு ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது.
குடியரசு தலைவர் 3 பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்த போது, அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு, நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் கேட்டு கொண்டோம். அதை ஏற்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், தற்போது, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அதற்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்.
இதன்மூலம் மக்களின் எழுச்சியை அடக்கவே சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என தெளிவாக தெரிகிறது. மரணத்தின் விளிம்பில் சிக்கி தவிக்கும் 3 தமிழர்களை காப்பாற்ற முதல்வருக்கு அக்கறை இல்லாதது தெரியவந்துள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படாமல், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் அதில் உறுதியாக இருக்க வேண்டும்.
அப்படி 3 பேரின் உயிரையும் காப்பாற்றினால், தமிழக மக்கள் முதல்வரை வைத்து கொண்டாடுவர். இல்லாவிட்டால் தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாத முதல்வர் என்பது தெளிவாகிவிடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment