இந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவை நம்பி ஒரு வாய்ப்பு கொடுங்கள். மக்களே...மக்களே.... உங்களை நாங்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் செய்து பேசுகையில், எனது சொந்தப் பணத்தில் இருந்த் மக்க்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளேன். இனிமேலும் அதை தொடர்ந்து செய்வேன்.
எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் இந்த பணியை தொடர்ந்து செய்வார்கள்.
தேமுதிக சார்பில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் உங்களுக்கு உண்மையாக இருந்து செயல்படுவார்கள். யாரிடமும் லஞ்சம் வாங்கமாட்டார்கள். நேர்மையான நிர்வாகத்தை கொடுப்பார்கள். அவர்கள் தவறு செய்தால் நானே தட்டிக்கேட்பேன்.
மக்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். இப்போது மக்கள் மீது உள்ள நம்பிக்கையால் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறோம்.
நான் மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். எங்கள் கூட்டணி எப்போதும் தெய்வத்தோடும் மக்களோடும்தான். இந்த உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவை நம்பி ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். மக்களே...மக்களே.... உங்களை நாங்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவோம் என்றார்.
பின்னர் பெரம்பலூரில் அவர் பேசுகையில், சேலம் மாநாட்டில் கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்டுத்தான் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி அமைத்தேன். இப்போதும் மக்களோடுதான் கூட்டணி அமைத்து உள்ளேன். இப்போது தேமுதிகவை நம்பி 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் வந்துள்ளன.
மக்களுக்காக போராடும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மக்களின் கடமையாகும். தமிழகத்தில் 67 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத இடத்தில்தான் புரட்சி உருவாகும்.
ஜாதிக் கட்சிகள் இன்று திராவிடக் கட்சிகளோடு இணைந்து பணம் சம்பாதித்து விட்டு, தேசிய கட்சிகள் தேவை இல்லை என்று கூறுகின்றன.
அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கூறும் ஒரு ஜாதிக்கட்சி தலைவர் தனது கட்சியிலேயே டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை என்றார்.
இதையடுத்து அரியலூரில் அவர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றால் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். இதில் சில இடங்களில் பிரச்சனை ஏற்பட்டால் அதை நான் பார்த்து கொள்கிறேன்.
மக்கள் மாறி மாறி குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களித்தது போதும். மாற்றத்தை ஏற்படுத்த தேமுதிகவுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார்.
ஒரு பைசா கூட எடுக்கமாட்டோம்-பிரேமலதா:
இந் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா திறந்தவேனில் நின்று பேசுகையில்,
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஊழலை ஒழிப்போம் என்று முழக்கமிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு மக்களாகிய நீங்கள் அமோக ஆதரவு அளித்தீர்கள். இதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
தேர்தலில் தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பளித்தால் ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்தை தருவோம், மக்களுக்கு சிறப்பான சேவை செய்வோம். அனைத்துப் பகுதிகளிலும் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம்.
உள்ளாட்சித் தேர்தல் என்பது சாதாரண தேர்தல் அல்ல. இந்த தேர்தலில் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்தால்தான் ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்தை தர முடியும். உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை கொண்டு செயல்படுகின்றன. இதில் ஒரு பைசா கூட வீணாக செலவழிக்கப்படக் கூடாது. தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மக்கள் வரிப்பணத்தில் ஒரு பைசாவை கூட அவர்கள் எடுக்க மாட்டார்கள் என்றார்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு-சிபிஐ விசாரணையை தேமுதிக ஏற்கும்:
இந் நிலையில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்ற கோரிக்கையை முழு மனதுடன் தேமுதிக ஏற்கும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது சம்பந்தமாக நான் சட்டமன்றத்தில் பேசியதை ஒரு சில எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றன.
இன்று நீதி விசாரணை வேண்டாம், சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று வைக்கப்படும் கோரிக்கை அவர்களுக்கு மன நிறைவு அளிக்குமானால் அந்த கோரிக்கையையும் முழு மனதுடன் தேமுதிக ஏற்று கொள்கிறது என்று கூறியுள்ளார்.
Post a Comment