எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இப்படி 'குப்பாங்கோ கும்மாங்கோ' வேலைகள் நடந்ததாக நமக்கு நினைவில்லை. உள்ளாட்சித் தேர்தலி்ல தனியாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, வேட்பு மனு தாக்கல் முடியும் வரை தனது வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடாமல் ஊத்தி மூடி, தொண்டர்களை பெரும் கடுப்பில் ஆழ்த்தி விட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் முக்கியக் கட்சிகள் அனைத்துமே கிட்டத்தட்ட தனியாக போட்டியிடுகின்றன. தேமுதிக ஒரு கூட்டணியை அமைத்து களம் காண்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்டவை தனியாக போட்டியிடுகின்றன. தனித்துப் போட்டியிடும் கட்சிகளில் ஒன்று காங்கிரஸ்.
இந்தக் கட்சி சார்பில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய 13 பேரைக் கொண்ட பிரமாண்டக் குழுவை அமைத்தனர். அவர்களும் 2 முறை கூடி தீவிரமாக ஆலோசித்தனர். பின்னர் தங்கபாலு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். ஆனால் முழுமையான வேட்பாளர் பட்டியலை தங்கபாலு வெளியிடவில்லை என்று காங்கிரஸார் குற்றம் சாட்டுகின்றனர். ஒப்புக்குச் சில பதவிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்து விட்டு காங்கிரஸ் மேலிடம் கப்சிப் ஆகி விட்டதாம்.
இதனால் நாம் எங்கு போட்டியிடுகிறோம் என்பது தெரியாமல் காங்கிரஸார் பெரும் குழப்பமாகி விட்டனர்.
கோவை, திருப்பூர், சேலம் மாநகராட்சிகளின் மேயர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகளுக்கான வேட்பாளர்கள் புதன்கிழமை இரவு வரை வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.
இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் காங்கிரஸாரும், நிர்வாகிகளும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்த நிலையில், சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஆர். விஜயவர்மன், திருப்பூர் மேயர் வேட்பாளராக டி.டி.கே. சித்திக் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
அதேபோல நேற்று மத்தியானம்தான் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதன் பிறகு அவர்கள் அரக்கப் பறக்க அடித்துப் பிடித்துக் கொண்டு போய் மனுத் தாக்கல் செய்தனர்.
ஆனால் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு கடைசிவரையிலும் யாரையும் அறிவிக்கவில்லை காங்கிரஸ். இதனால் சின்னையன் மற்றும் பச்சமுத்து ஆகிய இருவரும் காங்கிரஸ் வேட்பாளர்கள் என்று கூறி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் யார் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று அவர்களுக்கும் தெரியவில்லை. கட்சியினருக்கும் புரியவில்லை.
இதுகுறித்து மாநில நிர்வாகிகளிடம் சிலர் கேட்டபோது அதெல்லாம் மாவட்டத் தலைவர்களுக்கு அனுப்பியாச்சே என்று பதில் வந்ததாம்.
ஆனால் தற்போதைய நிலவரப்படி பல முக்கிய இடங்களில் யார் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்றே தெரியாத நிலைதான் காணப்படுகிறது.
காங்கிரஸ் நிலைமையைப் பார்க்கும்போது, 'போன் வயர் அந்து போய் நாலு நாளாச்சு' என்ற கவுண்டமணி பட காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
Post a Comment