2ஜி விவகாரம் தொடர்பான நிதியமைச்சக கடிதத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் என்னுடைய கருத்தல்ல. அது பல்வேறு அமைச்சகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்தாகும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இதை ஏற்பதாகவும், பிரச்சினை முடிந்ததாகவும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்தைக் குற்றம் சாட்டுவது போல ஒரு கடிதம் மத்திய நிதியமைச்சகத்திலிருந்து பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றது. இதையடுத்து மத்திய அமைச்சர்களுக்குள் மோதல் மூண்டது. நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்று சோனியாவிடம் போனார் ப.சிதம்பரம். கடிதத்துடன் தனக்குச் சம்பந்தம் இல்லை என்றார் பிரணாப் முகர்ஜி. இறுதியில் சோனியா காந்தி, இருவரையும் அழைத்துப் பேசினார். நேற்றும் சுமார் 2 மணி நேரம் பிரணாப் முகர்ஜியுடன் பேசினார்.
இதையடுத்து நேற்று மாலை ப.சிதம்பரத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரணாப். அவர்களுடன் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.அப்போது பிரணாப் முகர்ஜி ஒரு அறிக்கையை வாசித்தார்.
அதில், 2011, ஜனவரி மாதத்தில் மீடியாக்களில் 2ஜி விவகாரம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சகம் தயாரித்த அறிக்கை என்பது பல்வேறு அமைச்சகங்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பாகும் என்று விளக்க விரும்புகிறேன். அதில் உள்ள கருத்துக்கள் என்னுடைய கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என்றார் பிரணாப்.
இதையடுத்து அருகில் இருந்த ப.சிதம்பரம் பேசுகையில், அமைச்சரவையில் மதிப்பு வாய்ந்த, மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜியின் அறிக்கையை நான் ஏற்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரம் இத்துடன் முடிந்தது என்றார்.
நேற்று பிற்பகல் பிரணாபை அழைத்துப் பேசிய சோனியா காந்தி, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்களது தரப்பிலிருந்து பகிரங்க விளக்கம் வெளியானால்தான் ப.சிதம்பரம் சமாதானமாவார். இந்த விவகாரத்தை விட முக்கியமானதாக, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. எனவே இந்தக் கடித விவகாரத்தை இன்றைக்குள் மூடி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம். இதையடுத்தே ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசிய பிரணாப் பின்னர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
Post a Comment