Saturday, 12 November 2011
எச்.எம்.டி பிக்சர்ஸ் சார்பில் வி.இராவணன் தயாரிக்கும் படம், 'செங்காடு'. பிரபு சாலமன் உதவியாளர் ரமேஷ் ராமசாமி இயக்குகிறார். அருண் பிரகாஷ்ரூபா, சுரேஷ்நகினா, உத்தம்விமலா, விக்கிபிரியா ஆகிய நான்கு ஜோடிகளுடன் முத்துக்கருப்பன், அன்பழகன், வேணுகோபால், ரகுநாத் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, மணி. இசை, ஜெரோம் புஷ்பராஜ். பாடல்கள், இளையகம்பன். படம் பற்றி நிருபர்களிடம் ரமேஷ் ராமசாமி கூறியதாவது: வழக்கமாக நான்கு நண்பர்கள், தோழிகள் கதை என்றாலே, இப்படித்தான் இருக்கும் என்ற சினிமா பார்முலா எல்லாருக்கும் தெரியும். இதில் அந்த பார்முலாவை உடைத்து, புதிய திரைக்கதை யுக்தியுடன் உருவாக்கியுள்ளேன். சினிமாத்தனம் இல்லாத சினிமா இது. யதார்த்தமாகவும், ஜனரஞ்சகமாகவும் இருக்கும். நான்கு முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்குவது சாத்தியம் இல்லை என்பதால், புதுமுகங்களை தேர்வு செய்து, படப்பிடிப்பு நடத்தினேன். கற்பனைக்கதை என்றாலும், வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி சொல்லியிருக்கிறேன். காதல் துரோகத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியும். நண்பர்கள் செய்யும் துரோகத்தை தாங்கிக்கொள்ளவோ, மறக்கவோ முடியாது என்ற கருத்தை சொல்லும் கதை இது. சமீபத்தில் ஒரத்தநாடு பகுதியிலுள்ள ஆற்றில் அருண் பிரகாஷ், ரூபா நடித்த ஒரு பாடல் காட்சியைப் படமாக்கினேன். அருகிலிருந்த மதகு திறக்கப்பட்டதால், திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரூபா இழுத்துச் செல்லப்பட்டார். பயந்துபோன நாங்கள், அபயக்குரல் எழுப்பினோம். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்றி கரை சேர்த்தனர்.