சரோஜினி வரதப்பன் மறைவு: ஜெயலலிதா இரங்கல் Sarojini Varadappan died Jayalalithaa condoled
Tamil NewsToday,
சென்னை, அக். 17-
சமூக சேவகி சரோஜினி வரதப்பன் மறைவு தொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
பிரபல சமூக சேவகியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவத்சலத்தின் மகளுமான சரோஜினி வரதப்பன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தனது 92 வது அகவையில் இன்று (17.10.2013) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
இந்திய மகளிர் சங்கத்தின் தலைவராகவும், மயிலாப்பூர் அகடமியின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர் சரோஜினி வரதப்பன். 35 ஆண்டுகளுக்கு மேல் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினராக இருந்த சரோஜினி வரதப்பன், அதன் தலைவர் பதவியையும் சிறிது காலம் வகித்துள்ளார்.
கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சென்னை நகர ஷெரீப் ஆக பணியாற்றியவர். வயதான காலத்திலும் சமூக சேவை ஒன்றையே முழுமூச்சாகக் கொண்டு செயல்பட்டவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளுக்குச் சொந்தக்காரர்.
அனைவரிடத்திலும் எளிமையாகவும், இனிமையாகவும் பழகக்கூடிய சரோஜினி வரதப்பன் மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
...
Show commentsOpen link
Post a Comment