News Update :
Home » » மகிந்த ராஜபக்சவின் பகல் கனவு rajapakshe day dream

மகிந்த ராஜபக்சவின் பகல் கனவு rajapakshe day dream

Penulis : Tamil on Thursday 3 October 2013 | 00:30

மகிந்த ராஜபக்சவின் பகல் கனவு – தமிழக நாளேட்டில் தலையங்கம் !!
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

இலங்கையில் தமிழர்கள் அமைதியாகவும், சிங்களவர்களுடன் ஒற்றுமையாகவும் வாழ்ந்துவிடக் கூடாது என்பதிலும், அமைதி தொடரக் கூடாது என்பதிலும் அதிபர் ராஜபக்ச தீர்மானமாக இருக்கிறார் என்று தோன்றுகிறது.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண அரசு அமைய இருக்கிறது.

இந்தவேளையில், அந்த அரசுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதும், அதிக உரிமைகளுடன் விக்னேஸ்வரன் தலைமையிலான அரசு இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டு செயல்பட உதவுவதும்தானே, அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் எல்லோரும் எதிர்பார்க்கும் பண்பு.

ஒரு தேசத்தின் அதிபர், தமிழர்களும் எனது நாட்டவர்களே என்று உலக அரங்கில் கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் சொல்லும் ராஜபக்ச, நேர் விரோதமாக நடந்து கொள்வதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.

வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிபர் ராஜபக்ச அறிவித்திருப்பது, இலங்கை அரசு நிரந்தர அமைதி திரும்புவதில் அக்கறை காட்டவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

இராணுவத்தை இங்கேயிருந்து வெளியேற்றி நான் எங்கே கொண்டு போய் முகாமிடச் சொல்வது?" என்கிற அதிபர் ராஜபக்சவின் கேள்வியில் அதிகார தோரணையும், எதேச்சதிகாரப் போக்கும்தான் காணப்படுகிறதே தவிர, ஜனநாயகப் பண்பும், ஓர் அதிபருக்கே உரித்தான பெருந்தன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.

2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது முதல், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் இராணுவம் குவிக்கப்பட்டது.

தெருவுக்குத் தெரு துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களின் தொடர்ந்த கண்காணிப்பும், சாதாரண உடையில் நடமாட்டமும் அதிகமாகக் காணப்படுவதால், அந்தப் பகுதிகளில் மக்கள் சகஜநிலைக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறது என்றும், அச்ச உணர்வுடன்தான் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

சமீபத்தில் நடந்த வடக்கு மாகாணத் தேர்தலின் போது கூட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் வீடு புகுந்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்புச் செய்தியானது.

மறைமுகமான அச்சுறுத்தலிலும், மக்களை அச்ச உணர்வுடன் வைத்திருப்பதிலும் இராணுவத்தின் பங்கு கணிசமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாகத்தான், அதிபர் ராஜபக்சவின் கட்சி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் பெருவாரியான வெற்றியை அளித்திருக்கிறார்கள்.

இதுகூடவா அதிபர் ராஜபக்சவுக்குப் புரியவில்லை.

இராணுவத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து அகற்றுவது அடுத்த கட்டமாக இருந்தாலும், முதல் கட்டமாக வீரர்களை இராணுவ முகாம்களில் ஒதுங்கச் செய்து, மக்கள் பயமில்லாமல் சராசரி வாழ்க்கை வாழ வழி வகுக்காமல் போனால், பிறகு தேர்தல் நடந்து வடக்கு மாகாண அரசு அமைந்தால் என்ன? அமையாமல் போனால்தான் என்ன?

இராணுவத்தைக்கூட முகாம்களுக்குத் திருப்பி அனுப்பத் தயாராக இல்லாத ராஜபக்ச அரசு, உறுதி அளித்தபடி அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொள்ளும் என்று எப்படி நம்புவது?

அதிகாரமே இல்லாமல் பெயருக்குப் பதவி என்றால் விக்னேஸ்வரனின் அமைச்சரவையால் என்ன பயன் இருந்துவிடப் போகிறது?

தேர்தல் நடந்ததற்கே அர்த்தமில்லாமல் போய்விடுமே..

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற அதிபர் ராஜபக்ச நினைத்திருந்தால் ஒருநாள் தங்கியிருந்து இந்தியப் பிரதமரை சந்தித்திருக்க முடியும்.

பிரதமர் மன்மோகன் சிங் நியூயோர்க் சென்றடையும் தினத்தில், கொழும்பு திரும்பும் வகையில் தனது பயண ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, தான் தங்கியிருக்கும் நாள்களில் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்.

அதாவது, எனது வசதிக்கு நீங்கள் வந்து சந்தியுங்கள் என்று கூறாமல் கூறியிருக்கிறார் என்றால், அவர் எந்த அளவுக்கு இந்தியப் பிரதமரை மதிக்கிறார் என்பது தெரிகிறது.

ஏறத்தாழ 15,000 இராணுவ வீரர்கள் வடக்கு மாகாண வீதிகளில் உலவும் போது எப்படி அமைதியும், நிம்மதியும் திரும்பும்?

முன்னாள் இராணுவ அதிகாரியான வடக்கு மாகாண ஆளுநர் மாற்றப்பட்டு, விக்னேஸ்வரன் அரசுடன் இணக்கமாகப் பணியாற்றும் ஆளுநர் நியமிக்கப்படாமல் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு திறமையாகவும், சுமுகமாகவும் செயல்பட முடியும்?

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டுமானால், வடக்கு மாகாண அரசு முழு அதிகாரத்துடன் செயல்பட வேண்டும். இராணுவத்தாலும் அடக்குமுறையாலும் நிரந்தர அமைதியும், தீர்வும் ஏற்படும் என்று அதிபர் ராஜபக்ச நினைத்தால் அது பகல் கனவாகத்தான் இருக்கும்!

The post மகிந்த ராஜபக்சவின் பகல் கனவு – தமிழக நாளேட்டில் தலையங்கம் !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger