சென்னையில் ஓடும் 70 ஆயிரம் ஆட்டோக்களுக்கு புதிய கட்டண அட்டை நாளை முதல் வழங்கப்படுகிறது running 70 thousand autos new charge card
சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறைந்தபட்சமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணமும், அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 வீதம் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆட்டோ கட்டணத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்த உள்ளன. ஜி.பி.எஸ். கருவியுடன் டிஜிட்டல் மீட்டர் அரசு சார்பில் ஒவ்வொரு ஆட்டோவிற்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தற்போதுள்ள மீட்டரை திருத்தம் செய்ய 45 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15–ந்தேதிக்குள் சென்னையில் உள்ள அனைத்து ஆட்டோக்களிலும் புதிய கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையில் புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தற்போதைய மீட்டரில் புதிய கட்டணம் திருத்தம் செய்யும் வரை அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக புதிய கட்டணம் விவரங்கள் அடங்கிய அட்டை அச்சிடப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே உள்ள பழைய கட்டணம், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டணங்கள் கிலோ மீட்டர் வீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அட்டை நாளை அல்லது நாளை மறுநாள் முதல் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.
அங்கீகாரம் பெற்ற ஆட்டோக்களுக்கு மட்டும் இந்த கட்டண அட்டை கொடுக்கப்படும். இந்த கட்டண அட்டை ஆட்டோ டிரைவரிடம் கொடுக்கப்படமாட்டாது. உரிமையாளர்களிடம் மட்டுமே வழங்கப்படும்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:–
புதிய ஆட்டோ கட்டணம் கடந்த 25–ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் இடையே எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக புதிய கட்டண விவரம் அடங்கிய அட்டை வழங்கப்பட உள்ளது.
இந்த அட்டையில் ஆட்டோ உரிமையாளர் போட்டோ ஒட்டப்படும், அவரிடம் மட்டுமே அட்டை வினியோகம் செய்யப்படும். வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட்டு பெற வேண்டும்.
கட்டண அட்டையை பயணிகள் பார்வைக்கு தெரியும் வகையில் தொங்க விடவோ, ஒட்டவோ செய்ய வேண்டும். கட்டண அட்டை தயாராகி விட்டது. நாளை (வியாழக்கிழமை) அல்லது வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும்.
பழைய மீட்டரில் உள்ள கட்டணமும் இந்த அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. பழைய கட்டணப்படி கிலோ மீட்டருக்கு எவ்வளவு வருகிறதோ அதன் அடிப்படையில் புதிய கட்டணம் வசூலிக்கப்படும். அதனால் தான் அட்டையில் இரண்டு கட்டணமும் கொடுக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டணத்தை விட புதிய கட்டணம் கூடுதலாக இருக்கும். நாம் எத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்கிறோம் என்பதை அருகில் உள்ள புதிய கட்ட ணத்தோடு ஒப்பிட்டு வழங்க வேண்டும்.
ஆட்டோக்களின் உரிமையாளர்களிடம் மட்டுமே கட்டண அட்டை கொடுப்பதால் அவர்களுக்கு அதன் முழு விவரங்கள் தெரிய வரும். டிரைவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு தரக் கூடாது என்பதற்காக இதை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post a Comment