பரபரப்பை ஏற்படுத்தி கூடங்குளம் அணுஉலை திட்ட தோல்வியை மறைக்கிறார்கள்: உதயகுமார் kudankulam nuclear power plant udayakumar
கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணுஉலையில் முதற்கட்டமாக 500 மெகா வாட் மின் உற்பத்தியைதொடங்க இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 14–ந்தேதி அனுமதிவழங்கியது. இதனையடுத்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முதல் அணு உலையில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறினார்.ஆனால் இதுவரை மின்உற்பத்தி தொடங்கப்படவில்லை. கூடங்குளம் அணுமின்திட்ட தோல்வியடைந்து விட்டதாகவும், அதை மறைக்க தீவிரவாதிகள் ஊடுருவி விட்டதாககூறி சோதனை நடத்தி வருவதாகவும் அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
ஆளும் வர்க்கம் தோல்வியை தளுவும்போது தீவிரவாதிகள் வருவதாக கடைசியில் துருப்பு சீட்டை பயன்படுத்துவார்கள். தீவிரவாதிகள் ஊடுருவுவதாக கடந்த சில நாட்களாக வதந்தியை பரப்புகிறார்கள். தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை தகவல் கொடுத்து விட்டது.
தோல்வியடைந்த கூடங்குளம் அணுஉலைதிட்டத்தை மூடிமறைக்கவே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த 14–ந்தேதி மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி 18பேர் இறந்தனர். இந்த நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவில் இருந்து 400கோடி ரூபாயில் வாங்கப்பட்டது. பின்பு 450 கோடி ரூபாய் செலவில் பழுது நீக்கப்பட்டது.
கடந்த 14–ந்தேதி நீர்மூழ்கி கப்பலில் திட்டமிடாத பயணத்திற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள. அந்தகப்பலை அணுஉலைநோக்கி செலுத்தி தீவிரவாத தாக்குதல் நடத்தி விட்டு, ரஷ்ய நிறுவனங்களின் உதவியுடன் வாங்கப்பட்ட அணுமின்நிலைய பொருட்களில் ஊழல் மற்றும் அணுஉலை ஓட்டமுடியாத அவமானம் ஆகியவற்றை மூடி மறைக்க, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது பழியை போட்டு, அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க திட்டமிட்டு இருப்பது எங்களுக்கு தெரியவந்துள்ளது.
கூடங்குளம் அணுஉலை ஆதரவாளர் சகாயகபூர் சகோதரர்கள் கடந்த24–ந்தேதி இரவு 10.45மணிக்கு இடிந்த கரையில் 4குண்டுகளை வீசி வெடிக்கச்செய்தனர். இது குறித்து நாங்கள் புகார் மனு எழுதி கூடங்குளம் போலீஸ் நிலையம், முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு, நெல்லை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நள்ளிரவே அனுப்பினோம்.
புகாரை பெற்றுக்கொண்ட கூடங்குளம் போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் திரு முருகன் அதற்கான ரசீது வழங்கவில்லை. இந்நிலையில் மறுநாள் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 65பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதுகுறித்து நாங்கள் தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜத்திற்கு எங்களது புகார் மனுவுடன் விளக்க கடிதம் அனுப்பினோம். அதன்பேரில் அரை மனதாக சகாய கபூர் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அணுஉலைக்கு ஆதரவான கூத்தங்குளி கிராமத்தை சேர்ந்தவர்கள் இடிந்தகரை மற்றும் கூத்தங்குளி பகுதியில் தொடர்ந்து நாட்டு வெடி குண்டுகளை வீசி வருகின்றனர். அவர்களை தடுக்க முடியாத அரசு எந்த தீவிரவாதிகளை தடுத்து மக்களை காப்பாற்றப் போகிறது.
கூடங்குளம் அணுஉலை திட்டம் தோல்வியடைந்த திட்டம், அந்த திட்டத்தில் முறையற்ற பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்று அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த ஜூலை 11–ந்தேதி கூடங்குளம் அணு மின்நிலையத்தில் முதல் அணுஉலை இயங்கிவிட்டது என்றும், ஆகஸ்ட்மாத இறுதியில் 400மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என்றும் வளாக இயக்குனர் சுந்தர் கூறியிருந்தார்.
ஆனால் அங்கு இதுவரை அந்த மின்சாரமும் உற்பத்தி செய்யப்படவில்லை. ரஷ்ய நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்த விமானம் தாங்கும் போர் கப்பலான அட்மிரல் போஸ்கோ, மிக் ரக விமானம், ரக்ஷத் நீர்மூழ்கி கப்பல் , அணுஉலை திட்டம் ஆகியவற்றிற்கு நிதி கொடுத்துவிட்டு, நமது நாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார்கள். அதை மூடி மறைக்கவே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு உதயகுமார் கூறினார்
Post a Comment