இடைத்தேர்தலை முன்னிட்டு தலைமைச் செயலகமே சங்கரன்கோவிலுக்கு வந்துவிட்டது போன்று உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த மதிமுக தற்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சங்கரன்கோவிலுக்கு வந்தார். கோவில்பட்டி வழியே வந்த அவர் களப்பாகுளம் உள்ளிட்ட இடங்களில் மக்களிடம் ஆதரவு கேட்டார்.
சங்கரன்கோவிலில் அவர் பேசியதாவது,
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு மாற்றாக மதிமுக சட்டசபையில் செயல்படும். கடந்த திமுக ஆட்சியில் ஊழல், குடும்பத்திற்கு முக்கியத்துவம், மத்தியில் பதவியில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதால் அக்கட்சியை மக்கள் தூக்கி எறிந்தார்கள். தற்போது அதிமுக பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திய பிறகும் இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கின்றனர்.
பெரும்பான்மையான அதிமுக அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமை செயலகமே ஜார்ஜ் கோட்டையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வந்துவிட்டதை போல் உள்ளது. அவர்கள் லாரி, லாரியாக இலவசப் பொருட்களை அள்ளிக் கொடுக்கிறார்கள்.
எனவே, அதிமுக அரசுக்கு சட்டசபையில் கடிவாளமாகவும், காருக்கு பிரேக் போலவும், மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போலவும் மதிமுக செயல்படும். நான் 1977ம் ஆண்டில் இருந்தே அடிமட்ட தொண்டனாக இந்த தொகுதியில் வலம் வந்துள்ளேன். எனவே, மதிமுகவிற்கு ஒரு பிரதிநிதித்துவம் தரும் வகையில், சங்கரன்கோவிலில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
Post a Comment