இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் "மக்கள்" தொலைக்காட்சியில் இலங்கையின் போர்க்குற்ற சித்திரிப்புக்களைப் பார்த்துக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பமொன்றை சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம் மூளாய் என்ற இடத்தில் நேற்று வியாழக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜ.நா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைத் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட ஒருசில மணித்துளிகளில் மேற்படிக் குடும்பம் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் "மக்கள் தொலைக்காட்சியில்"; தினமும் 7 மணி தொடக்கம் 8 மணி வரை தமிழ் மக்களின் அவலங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதேபோன்று கடந்த வியாழக்கிழமையும் இது ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.
அந்த நேரம் பார்த்து திடீரென்று இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த நான்கு இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த வீட்டினுள் புகுந்து மக்கள் தொலைக்காட்சி நிகழ்வை அவதானித்துவிட்டு "இதைப் பார்க்கக்கூடாதென்று உங்களுக்குத் தெரியாதா? ஏன் பார்க்கிறீர்கள்?" என்றெல்லாம் கேட்டு குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளனர்.
இராணுவப் புலனாய்வாளர்களில் சிலர் சிங்களத்தில் உரையாடியதாகவும் சிலர் தமிழ் மொழியில் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படிக் குடும்பத் தலைவனிடமிருந்து தொலைபேசியைப் பறித்த இராணுவப் புலனாய்வாளர்கள் அதன் மெமறி கார்ட்ஐயும் பறித்துச் சென்றதுடன் இன்று வெள்ளிக்கிழமை உடுவில் இராணுவ முகாமுக்கு வருமாறும் கூறிச் சென்றுள்ளனர். மேலும் இனிமேல் இவ்வாறான நிகழ்வுகளைப் பார்க்க வேண்டாமென்றும் எச்சரித்துச் சென்றனர்.
இன்று அவர் உடுவில் இராணுவ முகாமுக்குச் சென்ற போது முகாமுக்கு அண்மையிலுள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்து அவரின் மெமறி கார்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் மேலதிக விடயங்களை காவல்துறையினர் கவனிப்பார்கள் என்று கூறியே இவரின் மெமறி கார்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றையே பார்க்க முடியாத இக்கட்டான நிலமையிலேயே யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். யாழில் தமிழ் மக்கள் எத்தகைய இராணுவ நெருக்குவாரங்களுக்குள் வாழ்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இந்த அச்சுறுத்தல் சம்பவம் ஒன்றே எடுத்துக்காட்டாகுமென்று யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment