நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சென்னையில், மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெறுகிறது.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியவர்கர்கள் நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும்.
இந்தப் படத்துக்காக சில தினங்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்க நேர்ந்தபோது காதல் மலர்ந்ததாம். இந்தக் காதல் குறித்து இருவரும் மவுனம் காத்தனர் ஆரம்பத்தில். ஆனால் பின்னர் கவுரவமாக ஒப்புக் கொண்டனர்.
2 மாதங்களுக்கு முன்பு பிரசன்னா, "எனக்கும், சினேகாவுக்கும் இடையே காதல் இருப்பது உண்மைதான். நாங்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்கள் இரண்டு பேரின் பெற்றோர்களும் சந்தித்துப்பேசி, திருமணத்தை முடிவு செய்வார்கள்'' என்று கூறினார்.
அப்போது, சினேகா அமெரிக்காவில் இருந்தார். பிரசன்னாவின் காதல்-திருமண அறிவிப்பை அவர் மறுக்கவில்லை. பகிரங்கமாக அறிவிக்கவும் இல்லை. பின்னர் பத்திரிகைப் பேட்டிகளில் ஆமாம் திருமணம் உண்மைதான் என்று சினேகா கூறினார்.
கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி காதலர் தினத்தன்று இருவரும் ஜோடியாக பத்திரிகைகளுக்கு 'போஸ்' கொடுத்து காதலை உறுதிப் படுத்தி, பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டார்கள்.
இந்த நிலையில், சினேகாவின் பெற்றோர்களும், பிரசன்னாவின் பெற்றோர்களும் சமீபத்தில் சந்தித்து சினேகா-பிரசன்னா திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். அதன்படி, இருவருக்கும் வருகிற மே 11-ந் தேதி, சென்னை வானகரம் அருகில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், திருமணம் நடக்கிறது.
திருமணத்துக்கான வேலைகள் இப்போதே தொடங்கி விட்டன.
"திருமணத்துக்குப்பின், சினேகா விரும்பினால் நடிக்கலாம். விரும்பவில்லை என்றால் நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். அதில், நான் தலையிட மாட்டேன். வாழ்க்கை வேறு, தொழில் வேறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்று ஏற்கெனவே பிரசன்னா கூறியிருந்தார்.
எனவே சினேகாவுக்கு நடிப்பை நிறுத்தும் ஐடியா இல்லையாம். புதிதாக மேலும் படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.
Post a Comment