முதல்வர் ஜெயலலிதா நாளை, நீலகிரி மாவட்டம் கோடநாடு செல்வதாக இருந்தார். முதல்வர் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல ஐஜி (பொறுப்பு) அம்ரேஷ் பூஜாரி, டிஐஜி ஜெயராமன், நீலகிரி எஸ்பி நிஜாமுதீன், குன்னூர் டிஎஸ்பி மாடசாமி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
கோத்தகிரி முதல் கோடநாடு வரை சாலையில் எந்தெந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராயப்பட்டது.
உள்ளூர் போலீசார் மட்டுமில்லாமல், கோவையில் இருந்து அதிவிரைவு படை போலீசாரையும் வரவழைக்க திட்டமிடப்பட்டது.
வழக்கமாக ஜெயலலிதா கோடநாடு வரும்போது சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு செல்வது வழக்கம்.
ஆனால், நீலகிரியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மேகமூட்டம் நிலவி வருகிறது. நாளையும் இதே போல் மேகமூட்டம் நிலவினால் ஹெலிகாப்டர் தரையிறங் குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, வாகனம் மூலம் தரைமார்க்கமாக முதல்வர் கோடநாடு செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் சில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தோழி சசிகலா ஆகியோரும் கோடநாடு செல்வதாக இருந்தனர். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதா சுமார் 3 வார காலம் தங்கி இருப்பார். டிசம்பர் கடைசியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில் சென்னை திரும்புவார் எனவும் பேசப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, தனது கொடநாடு பயணத்தை திடீர் என ரத்து செய்துள்ளார்.
Post a Comment