எந்த காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்... எந்த வினைக்கும் ஒரு எதிர்வினையுமிருக்கும்.
அப்படி கிளம்பியிருக்கும் எதிர்வினை...
''சசிகலா மோசமானவர்... மோசடியானவர் என்பதாகவே இருக்கட்டும்.... 25 ஆண்டுகள் அந்த மோசடிக்காரருடன் சேர்ந்திருந்ததால், சசிகலாவின் மோசடிகள் அனைத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவும் பொறுப்பாளர்தானே?
என்னமோ ஜெயலலிதா ஒன்றுமே தெரியாத அப்பாவி போலவும், சசிகலா மற்றும் குடும்பத்தினரால்தான் அவர் முழுமையாக மோசடி செய்யப்பட்டதாகவும் கூறுவது எத்தனை அபத்தம். அப்படிப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே ஒன்றுமே தெரியாதா?...''
-என்பதுதான் சசிகலாவுக்கு ஆதரவாகக் கிளம்பியிருக்கும் வாதம்!
இன்னொரு பக்கம் இப்போதைய ஜெயலலிதா நடவடிக்கையை வைத்து ஜெயலலிதாவை புனிதராக்கவும் சசிகலாவை வில்லன் கேரக்டர் போலவும் மாற்றும் முயற்சியில் சசிகலா எதிர்ப்பு ஊடகங்கள் மும்முரமாக இருப்பதாகவும் ஒரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஜெயலலிதாவால் மட்டுமல்ல, அவரது மந்திராலோசனையில் பிரதானமாக இடம் பெற்றுள்ள அந்த மூத்த பத்திரிகையாளராலும் கூட பதில் சொல்ல முடியாது!.
சசிகலா தவறானவர் என்பது 25 வருடங்கள் கழித்துதானா முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிந்தது?.
அப்படியெனில் 1991-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இருவரும் இணைந்தே செய்த தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பது? சொத்துக் குவிப்பு வழக்கு என்பது சசிகலா குடும்பத்தினர் மீது மட்டுமில்லையே... அதில் பிரதான குற்றவாளியே முதல்வர் ஜெயலலிதாதானே!.
சசிகலாவுடன் இணைந்து ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்துக்கள் எந்த கணக்கில் சேரும்? சிறுதாவூர், கொடநாடு, பையனூர்... எஸ்டேட்டுகள் என அத்தனை சொத்துக்களும் சசிகலா பெயரில் அல்லது அவரது உறவினர்கள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டது எதனால்? ஜெயலலிதாவின் நம்பிக்கையானவராக அவர் இருந்ததால் தானே?.
கொடநாடு எஸ்டேட் யாருடையது என்று கேட்டால், அது சசிகலாவுக்குச் சொந்தமானது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஒருவேலையும் செய்யாத, முன்னாள் வீடியோ கடை உரிமையாளர் ஒருவருக்கு இத்தனை பெரிய எஸ்டேட், அரண்மனைக்கு நிகரான எஸ்டேட் பங்களா எப்படி சொந்தமானது? அந்த பங்களாவை தமிழக அரசின் தற்காலிக தலைமைச் செயலகமாகவே மாற்றி வைத்துள்ளது எப்படி?.
ஜெ-சசி இருவரும் இணைந்தே அனைத்து காரியங்களையும் செய்தனர். அதற்காகவே சசிகலாவை கணவரிடமிருந்து பிரித்து தன்னுடனே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. அதிமுக செயற்குழு உறுப்பினர் பதவி தொடங்கி, யாருடன் கூட்டணி வைக்கலாம், யார் யாரை கட்சிக்குள் இழுக்கலாம் என்பதில் முதன்மை ஆலோசகர் பதவி வரை! இத்தனையும் செய்ய தேவைப்பட்ட சசி, இப்போது மட்டும் சதியாளரா?.
'ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அனைத்துவித உபாயங்களையும் கையாண்டது சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டிதான். விஜயகாந்துடன் பேரம் பேசியதிலிருந்து அடிப்படை வேலைகளைச் செய்ததும் இவர்கள்தான். அந்த உரிமையை அவர்கள் ஆட்சியில் நிலைநாட்டப் பார்ப்பதைப் பொறுக்காத குறிப்பிட்ட சிலர் தான் இப்போதைய நிலைக்குக் காரணம்' என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் நிறையவே உண்மைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
"முதல்வர் ஜெயலலிதாவின் தவறுகளுக்கெல்லாம் மூல காரணம் சசிகலா குடும்பம்தான் என்றால், சமச்சீர் கல்வி குளறுபடிகள், தலைமைச் செயலக மாற்றம், அண்ணா நூலக இடமாற்றம், பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கவனிப்பற்ற தமிழக சாலைகள், ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் திறமையற்ற நிர்வாகி என பெயரெடுத்தது போன்றவற்றுக்கும் சசிகலாதான் காரணம் என்று கூற முடியுமா?.
ஜெயலலிதாவை போற்றிப் பாதுகாக்க சில ஊடகங்கள் முனைகின்றன... அது இன்னும் சில தினங்களில் பல்லிளிக்க ஆரம்பித்துவிடும்," என்கிறார்கள் சசிகலா ஆதரவு தரப்பினர்.
ஆனால் இதெல்லாம் தற்காலிகமே என்கின்றனர் நடுநிலைப் பார்வையாளர்கள்.
"ஜெயலலிதா - சசிகலா இருவராலுமே, இப்போது மட்டுமல்ல, இனி எப்போதுமே பிரிய முடியாது.
ஜெயலலிதா தன்னை விரட்டிவிட்டாரே என்ற கோபத்தில் அவருக்கு எதிராக எதையும் செய்யக்கூடியவரல்ல சசிகலா. இதற்கு முன்பு ஜெயலலிதா அவரை விரட்டியபோதும் விசுவாசமாகவே நடந்து கொண்டார். சசியின் குடும்பத்தினரும் அப்படியே. அதேபோல வெளிப்படையாக அவர்களை விலக்கி வைத்தாலும், மீண்டும் எந்த நேரத்திலும் அவசியம் அல்லது நெருக்கடி கருதி ஜெயலலிதா அவர்களைச் சேர்த்துக் கொள்வது சாத்தியமே.
அவர்கள் இருவரின் நட்பும் பிரிவும் அவர்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கிறதோ தெரியாது... ஆனால் சசிகலா நீக்கத்துக்காக நடத்தப்படும் கொண்டாட்டமும் சரி, புலம்பலும் சரி அர்த்தமற்றவை!".
-இது பிரபல தேசிய ஆங்கிலப் பத்திரிகையின் ஒரு மூத்த பத்திரிகையாளர் சொன்ன கருத்து.
ஜெ. சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு:
இந் நிலையில், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் சசிகலாவின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஜனவரி 12ம் தேதி நடைபெறுவதால் ஜெயலலிதாவின் வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment