தனுஷ் நடிப்பில், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராக அவதரித்து இருக்கும் படம் 3. தனுஷ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். புதுமுகம் அனிருத் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் சூட்டிங் நடந்து வரும் வேளையில், சில வாரத்திற்கு முன்னர் இப்படத்தில் இருந்து சிங்கள் டிராக் ஆடியோவை ரிலீஸ் செய்தனர். வொய் திஸ் கொலைவெறி, கொலைவெறி... என ஆரம்பிக்கும் இப்பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் தனுஷே எழுதி பாடியிருக்கிறார்.
ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தபாடலை கேட்டு ரசித்துள்ளனர். மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட சிலர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரையும் இந்த பாடல் ரொம்பவே கவர்ந்துள்ளது. லட்சக்கணக்கான பேர் விரும்பி, ரசித்து பார்த்த கொலைவெறி பாடலுக்கு பின்னால் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அது என்னவென்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தே கூறியுள்ளார். இதோ...
21வயது நிரம்பிய அனிருத்தின் கனவு, ஏக்கம் எல்லாமே இசை தானாம். சென்னை லயோலா கல்லூரியில் இந்தாண்டு தான் பி.காம் முடித்துள்ளார். இந்த இளம்வயதில் எப்படி உங்களுக்குள் இசை, ஆர்வமும், ரசிகர்களின் ரசனையும் புரிந்தது என்று கேட்டால், சிறு வயது முதலே எனக்கு இசை ஆர்வம் அதிகம். சந்தியா என்ற டீச்சரிடம் வெஸ்டன் மியூசிக் கற்றுக்கொள்ள தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து பியானோ உள்ளிட்ட பல்வேறு இசை கருவிகளையும் கற்றுக்கொண்டேன். படித்து கொண்டு இருக்கும்போதே பல விளம்பர படங்களுக்கு இசை சேர்ப்பு செய்திருக்கிறேன். இது எனக்குள் உள்ள இசை ஆர்வத்தை மேலும் தூண்டியது.
சரி, ஐஸ்வர்யா தனுஷின் முதல்படமான 3 படத்தில் எப்படி உங்களுக்கு வாய்ப்பு வந்தது என்று கேட்டால், நான், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மூவருமே நன்கு அறிமுகமானவர்கள் தான். அவர்களுடன் நிறைய குறும்படங்களில் வேலை பார்த்துள்ளேன். அதன் அடிப்படையில் என்னை இந்தபடத்திற்கு இசையமைக்க தேர்வு செய்தனர். அது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. எங்க மூவரின் கூட்டணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஜாலியான மூடில் தான் எப்பவும் ஒர்க் பண்ணுவோம் என்றவரிடம், கொலைவெறி பாட்டு எப்படி கம்போஸ் பண்ணினுங்கே, தனுஷ் எப்படி டியூன் கேட்டு பாடல் வரிகள் எழுதி பாடினார் என்று கேட்டதற்கு, சொன்னா நம்பமாட்டிங்க சும்மா மியூசிக் கம்போஸ் பண்ணிகிட்டு இருந்தேன். அப்போ தனுஷ் திடீர்னு மைக் முன்னாடி வந்து நின்று பாடல் வரி கூட எதுவும் எழுதாமல் மியூசிக் கேட்டு பாட ஆரம்பச்சுட்டாரு. எல்லாமே தனுஷ் போட்ட வரிகள் தான். அதில் தமிழ், ஆங்கிலம் மிக்ஸ் பண்ணி எழுதி, பாடி இருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கும் இந்தபாட்டு ரொம்ப பிடிச்சுபோக இந்தபாட்டை உருவாக்கினோம். ஆனா அப்போ எங்களுக்கு தெரியாது. இந்தபாட்டு இவ்வளோ பெரிய ஹிட்டாகும் என்று. இளைஞர்கள் விரும்பி கேட்பாங்கனு நினைச்சோம். ஆனா எல்லா வயசுக்காறங்களும் இந்தபாட்டு ரசிக்கிறாங்க. தமிழ்நாட்டுல மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்தபாடல் ஹிட்டாகியுள்ளது. இதனால் எங்க டீமே ரொம்ப சந்தோஷமா இருக்கோம் என்றார்.
3 படத்தில் மொத்தம் 10 பாட்டு இருக்காம். அதில் ஒரு பாடல் ரீ-மிக்ஸ் பாடலாம். முதல்முறையாக தனுஷ், ஸ்ருதியுடன் சேர்ந்து ஒரு டூயட் பாட்டு பாடியிருக்கிறாரம். இதுதவிர கிளப் சாங்கை அனிருத்தும், மற்றொரு பாடலை முன்னணி பிரபல பாடகர்களும் பாடியிருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற இருவருக்கு இந்த படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார்களாம். இளம் நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர், பாடகர்கள் என படம்முழுக்க மொத்தமும் சிறு வயது ஆட்களே.
முதல்படத்தின் பாடல்களே வெளிவராத நிலையில் படத்தில் உள்ள ஒரு பாடல் மட்டும் சூப்பர் ஹிட்டாகியிருப்பது அனிருத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரைத்தேடி பாலிவுட் அழைப்புகளும் வந்துள்ளன. பாலிவுட்டின் பெரிய சினிமா கம்பெனிகள் இரண்டு தங்களின் படத்திற்கு இசையமைக்க இவரை அணுகியுள்ளது. ஆனால் இப்போது 3 படத்தில் அனிருத் பிஸியாக இருப்பதால், அதை முடித்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.
கொலைவெறியின் வெற்றி, அனிருத்துக்கு உலக அளவில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!!
Post a Comment