எந்திரன் கதைத் திருட்டு வழக்கு விறுவிறுப்பான திருப்பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன? முதலில் வழக்கின் விபரத்தைப் பார்ப்போம்.
நக்கீரன் குழும வெளியீடான 'இனிய உதயம்' இலக்கிய பத்திரிகையில் 96ல் வெளியான ஜூகிபா என்கிற ரொபாட் தொடர்பான தனது கதையை அப்பட்டமாகத் திருடி ரஜினியின் 'எந்திரன்' படம் எடுக்கப்பட்டிருக்கிறது என புகார்க் குரல் கொடுத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன், கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரனிடம் எந்திரன் படத்தயாரிப்பாளர் சன் டி.வி.கலாநிதி மாறன் மீதும் படத்தின் இயக்குநர் சங்கர் மீதும் குற்றவியல் புகாரைக் கொடுத்தார்.
ஜூகிபா கதையையும் எந்திரன் படத்தையும் ஒப்பிட்டுப்பார்த்த காவல்துறை அதிகாரிகள், புகாரில் நம்பகத்தன்மை இருக்கிறது என்று தெரிவித்ததோடு ஆளும்கட்சியின் செல்வாக்குள்ள கலாநிதி மாறன் பெயரை மட்டும் புகாரில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று வலியுறுத்தினர். இதை தமிழ்நாடனும் அவரது வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொள்ளாததால் புகாரை ஏற்கமறுத்துவிட்டது அன்றைய காவல்துறை.
இதைத் தொடர்ந்து கதைத் திருட்டு மூலம் மோசடி செய்ததாகவும் இந்திய பதிப்புரிமை சட்டத்திற்கு முரணாக நடந்துகொண்டதாகவும் கலாநிதி மாறன், சங்கர் ஆகியோர் மீது எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, இவர்களிடம் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கையும் தமிழ்நாடன் தரப்பு தொடர்ந்தது.
தமிழ்நாடன் சார்பாக சீனியர் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் மற்றும் எட்விக், சிவகுமார் ஆகியோர் ஆஜரானார்கள். சாட்சிகளை விசாரித்து, ஆவணங்களை பரிசீலனை செய்த பிறகு எழும்பூர் 13வது நீதிமன்றம் கலாநிதி மாறனையும் சங்கரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அதிரடியாக சம்மனைப் பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய கலாநிதி மாறனும் சங்கரும், கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்க இடைக்காலத் தடையை வாங்கினர்.
இந்த நிலையில் இவர்களது தடையை நீக்கும்படி தமிழ்நாடனின் வழக்கறிஞர்களான பி.டி.பெருமாள், எட்விக், சிவகுமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கலாநிதி மாறன் சார்பாக மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான பி.எஸ்.ராமன் ஆஜரானார். வழக்கை நீதியரசர் ஆறுமுகசாமி விசாரித்தார்.
அப்போது கலாநிதி தரப்பு, கால அவகாசம் கேட்க, நீதியரசரோ இதற்கு மேல் கால நீட்டிப்பு தரமுடியாது என்றபடி ஒரு வார காலம் மட்டும் அவகாசம் கொடுத்து வழக்கை டிசம்பர் 9ந் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார். அன்று விசாரணை தொடங்குகிறது.
வழக்கு எப்படி போகும் என்பதைத் தீர்மானிக்கும் நாள் அது என்பதால், இருதரப்பும் அந்த நாளை பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
இணையதள நேயர்களான நாமும் பலத்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.
Post a Comment