தமிழகத்திலிருந்து யாரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் போகக் கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பது தவறு. சபரிமலைக் கோவிலில் நமக்குள்ள உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் போராட்டம் நடத்துவதற்கு தேனி சென்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்கு சென்று சபரிமலையில் தான் ஐயப்பனை தரிசிக்க வேண்டுமா? தமிழ்நாட்டில் சுவாமி ஐயப்பன் கோவில்கள் கட்டி இங்கேயே தரிசனம் நடத்தலாம். அங்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்பது போல் பேசியுள்ளார்.
விஜயகாந்த்தின் இந்தப் பேச்சு, கேரளத்தில் ஐயப்ப பக்தர்களை தாக்குவோர்க்கு சாதகமாகவும் தலைமுறை தலைமுறையாக சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்ற ஐயப்ப பக்தர்களின் உரிமைகளை பறிப்பதாகவும் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
விஜயகாந்தின் இந்தப் பேச்சு சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் உரிமை இனி தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு இல்லை என்பது போலவும் அமைந்துள்ளது.
எத்தனை பிரச்னைகள் எப்படி நடந்தாலும் கேரள மக்களையும் தமிழக மக்களையும் மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்று எந்த சக்திகள் முயன்றாலும் அவற்றை எல்லாம் முறியடித்து தேச ஒருமையை காக்கக் கூடிய ஒன்றாக தமிழக ஐயப்ப பக்தர்களுடைய சபரிமலை பயணமும் கேரள முருக பக்தர்களின் பழனி பயணமும் தொடர்ந்து நடந்தே தீரும். அதை தடுக்க யார் முயன்றாலும் பாரதிய ஜனதா கட்சி தமிழக மக்களின் முழு ஒத்துழைப்போடு அதனை முறியடித்தே தீரும்.
சபரிமலையில் தமிழர்களுக்கு இருக்கும் வழிபடும் உரிமையை விட்டுக் கொடுக்கும் வகையில் பேசியுள்ள விஜயகாந்த், தமிழக மக்களிடமும் குறிப்பாக ஐயப்ப பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
Post a Comment