நசுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்க, இலங்கையில் 30 ஆண்டு காலம் தனி ஈழம் கேட்டுப் போராடியது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.
கடந்த 2009ம் ஆண்டு உலக நாடுகளின் துணையுடன் பிரபாகரனின் படைகளை வென்றது இலங்கை ராணுவம். தங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு உலகம் எதிர்ப்பு காட்டுவதைப் புரிந்துகொண்ட புலிகள் அமைப்பு, ஆயுதங்களை மவுனிப்பதாகக் கூறிவிட்டு, அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
புலிகளின் வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக இலங்கை புலம்பிக் கொண்டுள்ளது. அதே நேரம் 'போர்க்குற்றவாளி' மகிந்த ராஜபக்சேவும் அவரது தம்பிகளும் எந்த நாட்டுக்குள்ளும் கால் வைக்க முடியாத அளவுக்கு தமிழர் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது.
முள்ளி வாய்க்கால் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும், அவர் இன்னும் இருப்பதாக இன்னொரு தரப்பு கூறுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கமும் இதுவரை அவரது இறப்பை உறுதிப்படுத்தவில்லை. ஆண்டுதோறும் வெளியாகும் மாவீரர் தின அறிக்கையில், தேசியத் தலைவர் வழிகாட்டுதலில் போராட்டம் தொடரும் என்றே கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இன்று வந்துள்ளது. பொதுவாக பிரபாகரன் தனது பிறந்த நாளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், தன்னுடன் நின்று இலங்கை ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த போராளிகளின் நினைவு நாளான மாவீரர் தினத்துக்குதான் (நவம்பர் 27) அதிக முக்கியத்துவம் தருவார்.
நாளை நடக்கும் மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டுள்ளன. இன்று பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழின உணர்வாளர்கள், அவர்களது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழ் அமைப்புகள் அனைத்தும் அவர்களது அலுவலகங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு புலிக்கொடி ஏற்றியும் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றன.
நாளை நடக்கும் மாவீரர் தினத்தையொட்டி சேலத்தில் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு கட்சியினர் மாவீரர் தின எழுச்சியில் பங்கேற்கிறார்கள்.
நாமக்கல்லில் சீமான் தலைமையில் மாவீரர் எழுச்சி தினக் கூட்டம் நடக்கிறது. இந்த எழுச்சி கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால், தடையை மீறி இக்கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
Post a Comment