இத்தாலியை சேர்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் போப்பும், இமாமும் உதட்டில் முத்தம் கொடுத்துக் கொள்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இது பெரும் பரபரப்புக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த "பெனட்டான்" என்ற நிறுவனம் உலக மக்களை கவருவதற்காக வித்தியாசமாக யோசித்து 6 வகையான விளம்பரங்களை தயாரித்தது. "அன்ஹேட்" (வெறுப்பில்லை) என்ற தலைப்பில் பிரபலமான உலக தலைவகள் 6 பேரின் போட்டோக்கள் இந்த விளம்பரத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளன. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆட்சேபகரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த விளம்பரம் பெருத்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
ஒரு விளம்பரத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், சீன அதிபர் ஹஜிண்டாவோவும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்துக் கொள்வது போன்று உள்ளது. இதுகூட பரவாயில்லை. மற்றொரு விளம்பரம்தான் பலரின் கோபத்தை கிளறி விட்டுள்ளது. போப் 16-ம் பெனடிக், எகிப்து நாட்டைச் சேர்ந்த இமாம் அகமது எல் தய்யேப் இருவரும் வாயுடன் வாய் வைத்து முத்தமிட்டுக் கொண்டு இருப்பது போன்று மற்றொரு விளம்பரத்தில் உள்ளது.
அதேபோல இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெடன்யாகு, பாலஸ்தீன தலைவர் முகம்மது அப்பாஸ் ஆகியோர் முத்தமிட்டப்படி இருப்பது போன்று மற்றொரு விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உலக பிரபலங்கள் ஆறு பேரை வைத்து 6 விதமான விளம்பரங்களை தயாரித்து, பெனட்டன் நிறுவனம் முக்கிய இடங்களில் வைத்துள்ளது. உலகம் முழுவதும் இந்த விளம்பரத்தை கொண்டு செல்ல அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள் பலத்த சர்ச்சையையும், பெருத்த கண்டனங்களையும் சம்பாதித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் நாடுகளும், தலைவர்களும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். இந்த விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும், மேற்கொண்டு வேறு எங்கும் இந்த விளம்பரத்தை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். விளம்பரங்களில் இந்த உலக தலைவர்களின் படங்களை பயன்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெனட்டான் நிறுவனம் அனுமதி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.
எனவே சில அமைப்புகளும், நபர்களும், அந்த நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என்று பெனட்டான் நிறுவனமும் தனது வக்கீல் களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. முன்னதாக பாரீசில் நடந்த இந்த விளம்பர வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்நிறுவன அதிகாரி ஒருவர் பேசும்போது, இதை ஆபாசமாக பார்க்க கூடாது. இந்த காட்சிகள் மிகவும் பலம் வாய்ந்தவை. இதன்மூலம் மக்களுக்கு நல்ல செய்தியை கொண்டு செல்ல உள்¢ளோம்,
தலைவர்கள் யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. சகோதரத்துவத்தை வலியுறுத்தவே தலைவர்கள் முத்தமிட்டுக் கொள்வது போன்று தோற்றத்தை உருவாக்கினோம் என்று குறிப்பிட்டார். எனினும் எதிர்ப்பு வலுத்துள்ளதால் இந்த விளம்பரங்களின் கதி என்னவாகும்? என்று கேள்வி எழுந்துள்ளது.
ஒன்று உலகம் முழுவதும் இந்த விளம்பரத்தை கொண்டு செல்லும் திட்டம் சில நாடுகளுடன் நிறுத்திக் கொள்ளப்படும். அல்லது இந்த விளம்பரங்கள் திரும்ப பெறப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சர்ச்சைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று "பெனட்டான்" நிறுவனம் அறிவித்துள்ளது.
Post a Comment