ரிலீசான முதல் வாரம் வசூலில் நம்பர் ஒன் படமாகத் திகழ்ந்த ஷாரூக்கானின் ரா ஒன், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பின்தங்கிவிட்டது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்திப் படம் ஷாரூக்கானின் ரா ஒன். அசாதாரண பப்ளிசிட்டி மூலம் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பினர் இந்தப் படத்துக்கு.
தீபாவளியன்று இந்தப் படம் உலகம் எங்கும் பிரமாண்டமாக வெளியானது. துவக்கநாளில் மிகப்பெரிய வசூலைக் குவித்த இந்தப் படம், இரண்டாம் நாளே ரூ 30 கோடிக்கும் அதிகமாக ஈட்டியது. 9 நாட்களில் ரூ 200 கோடியைத் தாண்டிவிட்டது ரா ஒன்.
ஆனால், இந்தவாரம் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படியானால் இந்தப் படம் வெற்றியா தோல்வியா?
"வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை. தயாரிப்பாளர் இப்போதைக்கு தப்பித்துவிட்டார். தனது முதலீட்டின் மீது 30 சதவீதம் வரை லாபம் பார்த்துள்ளார். இன்னும் ஓரிரு வாரங்கள் நல்ல வசூலுடன் ஓடியிருந்தால் இந்தப் படம் ஹிட் லிஸ்டில் சேர்ந்திருக்கும். ஆனால் இந்த வாரம் மொத்தமே ரூ 14 கோடி வசூலித்துள்ளது. பல தியேட்டர்களில் படம் தூக்கப்பட்டு வருகிறது," என்கிறார் பிரபல சினிமா வர்த்தக பார்வையாளர் கோமல் நாதா.
பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் கூறுகையில், "நிச்சயம் ரா ஒன் வெற்றிப் படமே. ஆனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றிப்படமல்ல. இருந்தாலும் நிகரலாபமாக ரூ 125 கோடியை நெருங்கிவிட்டது," என்றார்.
Post a Comment