உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது கடவுள் மீது ஆணையாக என்றும், தங்களின் குலதெய்வத்தின் மீதோ அல்லது விரும்பிய தெய்வத்தின் பெயரிலோ, அல்லது தாங்கள் சார்துள்ள அரசியல் கட்சியின் தலைவரின் பெயரிலோ சத்தியம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.
பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் உளமார என்று உறுதி கூறி பதவி ஏற்ப்பார்கள். ஆனால் நாம் இதுவரையிலும் கேட்காத ஒரு தலைவரின் பெயரில், அதாவது நம் நாட்டிலேயே இல்லாத, அரசியல் கட்சி நடத்தாத ஒரு இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்றுள்ளார். யார் இவர் என்று பார்ப்போம்.
பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளைக் கழக செயலாளராகவும், பழனி நகர எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவராகவும் இருப்பவர் சோலை கேசவன். இவருக்கு வயது 55. தீவிர அ.தி.மு.க கட்சிக்காரரான இவர், பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார்.
கடந்த 2001 உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க சார்பில் பழனி நகராட்சி 1வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2006 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு தோற்றுப்போனார். இந்த முறை அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கடமை தவறாமல் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார்.
உங்களுக்கு எப்படி பிரபாகரன் மீது இவ்வளவு பற்றுதல் என்று சோலை கேசவனிடம் கேட்டோம்..?
1980-86 ஆண்டுகளில், ஈழ விடுதளைப்போர் துவங்கிய காலகட்டங்களில், தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பிரபாகரனை வளர்த்தார். பிரபாகரனின் தாய் எம்.ஜி.ஆர்... தந்தை இந்திராகாந்தி. இவர்களின் வளர்ப்பால் தான் அந்த இயக்கம் நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் என்னுடைய வாழ்நாளிலேயே வாங்கி கொடுக்கும் என்று நம்பியிருருந்தேன்.
ஆனால், சோனியா என்ற ஒருவரால் என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கணவும், விருப்பமும் நாசமாய் போனது. எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் எந்த திட்டமும் தோற்றது கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட யாரும் தோற்கவும் மாட்டார்கள்.
இன்றில்லை... நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு... பிரபாகரன் அதை செய்து முடிப்பார். அவரது விடுதலை வேட்கை பலம் மிகுந்தது. அந்த விடுதலை வேட்கையை நானும் நம்புகிறேன், அதனால் தான் நான் பிரபாகரனின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக பதவி ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.
உங்களைப்போலவே உலகத்தமிழர்கள் பலரும் நம்புகிறார்கள்.
Post a Comment