அரசியல் கட்சி தொடங்க திட்டமா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை Actor Vijay refutes floating political party
சென்னை, அக்.23-
நடிகர் விஜய் புதுக்கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாகவும், இதுதொடர்பாக தனக்கு நெருக்கமான சிலருடன் அவர் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் பிரபல தமிழ் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தி விஜய்யின் தீவிர ரசிகர்களிடையே ஆனந்தத்தையும் கட்சி சார்பற்ற நிலையில் அவரது நடிப்பை மட்டுமே கண்டு ரசிக்கும் நடுநிலையாளர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில் அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து, அரசியல் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதைப் படித்துவிட்டு ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடக்கும் ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். கேரளாவுக்கு நான் செல்லவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படியொரு தவறான செய்தியின் காரணமாக ரசிகர்கள் மட்டுமின்றி, நானும் குழப்பம் அடைந்துள்ளேன்.
இனி வருடத்துக்கு 2 படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு, பகலென்று பார்க்காமல் உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான்.
ஆகவே, பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.
...
shared via
Post a Comment