News Update :
Home » , , , » மதுரை மாணவி நந்தினி நள்ளிரவில் கைது

மதுரை மாணவி நந்தினி நள்ளிரவில் கைது

Penulis : Tamil on Thursday, 1 August 2013 | 00:04

மதுவிலக்கு கோரி கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி உள்பட 6 பேரை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூரண மதுவிலக்கு கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கல்லூரி முன்பு கடந்த 29–ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருக்கு சட்டக்கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் அன்று இரவு 7 மணிக்கு போலீசார் நந்தினியை கைது செய்து விடுவித்தனர். அதன் பிறகு இரவு 10.30 மணிக்கு சட்டக்கல்லூரி வந்த நந்தினி மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

அவருடன் சட்டக்கல்லூரி மாணவர் விஜிகுமாரும் போராட்டத்தில் ஈடுபட்டார். மறுநாள் காலை (30–ந்தேதி) நந்தினிக்கு ஆதரவு தெரிவித்து லயோலா கல்லூரி மாணவர்கள் ஜான் பிரிட்டோ, மணிகண்டன், ஜாய்ஜோதி கல்லூரி மாணவர் மோகன், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர் மாரநாடு கருப்பசாமி, அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் யுவராஜ் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் சமூக சேவகர் சசிபெருமாள் சென்னையில் இருந்து மதுரை வந்து நந்தினியை பாராட்டி அவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில் நேற்று மாணவி நந்தினி மற்றும் உண்ணாவிரத்தில் ஈடுபட்ட மாணவர்களை பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ம.தி.மு.க. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, பா.ம.க. மாநில துணைத்தலைவர் செந்தில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் வைகோ, ஜி.கே.மணி ஆகியோர் போன் மூலம் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் 3–வது நாளான நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நந்தினி உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள நந்தினி ‘‘மாலைமலர்’’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நான் சட்டக்கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து தோழிகளுடனும், நண்பர்களுடனும் கலந்துரையாடுவேன். மதுவை ஒழிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சக தோழிகள், நண்பர்களுடன் சேர்ந்து வீதி வீதியாக சென்று மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆய்வு நடத்தினோம்.
மதுவினால் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து உதைக்கும் கணவன்மார்கள், நடு ரோட்டில் நின்று தகராறு செய்யும் போதை நபர்கள் இவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம்.
அதற்கு முன்பாக தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என முதல்–அமைச்சர் உள்பட நிர்வாகத்துறையில் உள்ள 145 பேருக்கு மனு அனுப்பினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால்தான் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 29–ந்தேதி நான் தனியாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினேன். எனது போராட்டத்திற்கு ஆதவராக 2–ம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர் விஜிகுமார், மாரநாடு கருப்பசாமி (வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்), யுவர ராஜா (அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்), வினோத் (தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி) ஆகியோரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
சட்ட விதிகளை மீறாமல் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் நள்ளிரவில் போலீசார் எங்களை கைது செய்து ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டனர். இதனால் போராட்டங்களை நிறுத்த மாட்டோம். மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மாணவ–மாணவிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நந்தினியின் தந்தை பெயர் ஆனந்த். தமிழ்நாடு வேளாண்மை துறையில் 24 ஆண்டுகள் இளநிலை பொறியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள்தான் நந்தினி.
மதுவிலக்கை அமுல்படுத்த தனது மகள் நடத்தும் போராட்டத்துக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger