தர்மபுரி காதல்-கலப்பு திருமண விவகாரத்தில் காதலன் இளவரசனின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறுகிறார்கள். எனவே இளவரசன் பிணத்தை மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பட காட்சிகளை ஐகோர்ட்டில் நீதிபதிகள், மத்திய-மாநில அரசு டாக்டர்கள், வக்கீல்கள் பார்த்தனர்.
பிரேத பரிசோதனை பற்றிய ஆய்வு அறிக்கையை டாக்டர்கள் தாக்கல் செய்த பின்பு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். ஆனால் இளவரசன் உடலை தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், எஸ்.ஆர்.எம். மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறை பேராசிரியர்கள் இளவரசன் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
அதன்படி டாக்டர்கள் தங்கராஜ், சம்பத்குமார் ஆகியோர் நேற்று தர்மபுரி சென்று அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள இளவரசன் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இளவரசன் உடல் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. எங்கெல்லாம் காயம் இருக்கிறது என்பதை ஆய்வு செய்தனர். அவர் அணிந்திருந்த சட்டை-பேண்ட் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் தர்மபுரியில் இளவரசன் உடல் கிடந்த ரெயில்வே பாதையிலும் ஆய்வு செய்தனர். உடல் கிடந்த இடம், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இருந்த இடம் அதன் தூரம் போன்ற விவரங்களை சேகரித்தனர்.
இன்று இந்த வழக்கு நீதிபதிகள் தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர்கள் சம்பத் குமார், தங்கராஜ் ஆகியோரின் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-
இளவரசன் உடலை ஆய்வு செய்த டாக்டர்கள் இருவரும் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எனவே மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்.
இதில் தமிழக அரசு டாக்டர்களும், மனுதாரர் டாக்டர்களும் இடம் பெற மாட்டார்கள். நிபுணத்துவம் பெற்ற புதிய டாக்டர்களை நாங்களே நியமிக்கிறோம். அவர்கள் சுதந்திரமாகவும், ஒருதலைப்பட்சமின்றியும் பிரேத பரிசோதனை செய்வார்கள்.
இவ்வாறு கூறினார்கள்.
மனுதாரர் வக்கீல் பிரசாத்:- எங்கள் தரப்பு டாக்டரையும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும். அப்போது தான் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியும்.
திருமாவளவன் வக்கீல் பிரபாகரன்:- டாக்டர்களுடன், தடயவியல் நிபுணர்களைக் கொண்டும் பிரேத பரசோதனை செய்ய வேண்டும்.
அரசு வக்கீல் சண்முக வேலாயுதம்:- இளவரசன் உடல் 10 நாட்களாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீதிபதிகள்:- ஏன் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. உடலை சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வாருங்கள். இங்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது. சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று மாலையே இளவரசன் உடலை கொண்டு வாருங்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 டாக்டர்களை விமானத்தில் இன்றே அழைத்து வந்து சென்னை ஆஸ்பத்திரியில் வைத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உடனே அரசு வக்கீல் சண்முகவேலாயுதம் நீதிபதிகளைப் பார்த்து, இளவரசன் உடலை தர்மபுரியில் இருந்து சென்னை கொண்டு வந்து இங்கு பிரேத பரிசோதனை செய்ததும் மீண்டும் தர்மபுரி கொண்டு செல்ல வேண்டும். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நாளை (சனிக்கிழமை) இளவரசன் உடலை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிலேயே 3 எய்ம்ஸ் டாக்டர்கள் மூலம் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Post a Comment