தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்கள் தேர்வு செய்ய 27-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஓட்டு தேவை. அ.தி.மு.க. - கம்யூனிஸ்டு அணியில் 170 எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளது. இவர்கள் ஓட்டு போட்டு அ.தி.மு.க.வின் 4 வேட்பாளர்களையும், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிடும் டி.ராஜாவையும் தேர்வு செய்து விடுவார்கள்.
6-வது எம்.பி.யை தேர்வு செய்வதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 2 பேரும், புதிய தமிழகம் கட்சியின் 2 எம்.எல்.ஏக்களும் தி.மு.க.வை ஆதரிக்க போவதாக அறிவித்துவிட்டனர். இதனால் தி.மு.க.வின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது.
பா.ம.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இவர்கள் யாருக்கு என்பது பற்றி இன்று நடைபெறும் தலைமை செயற்குழுவில் முடிவு செய்யப்படுகிறது. அவர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தால் தி.மு.க.வின் பலம் 30 ஆக உயரும். கனிமொழி வெற்றி பெற மேலும் 4 ஓட்டுகள் மட்டுமே தேவை. காங்கிரசிடம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்கள் ஆதரவை பெற தி.மு.க.வும், தே.மு.க.வும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளன. இரு கட்சிகளும் ஆதரவு கேட்பதால் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது.
காங்கிரஸ் தி.மு.க.வை ஆதரித்து விட்டால் கனிமொழி எளிதில் வெற்றி பெறுவார். தே.மு.தி.க.வுக்கு 22 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரையும் தே.மு.தி.க.வுக்கு வாக்களிக்கும்படி கட்சி கொறடா சந்திரகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது உறுதியாகவில்லை.
அ.தி.மு.க. தரப்பில் 2-வது ஓட்டு போடுவதை விரும்புவார்களா? என்பதும் உறுதியாகவில்லை. அவர்கள் 2-வது ஓட்டு போடும் பட்சத்தில் அது தே.மு.தி.க. வுக்கு ஆதரவாக விழுமா? தி.மு.க.வுக்கு ஆதரவாக விழுமா? என்பதும் சஸ்பென்சாகவே உள்ளது.
Post a Comment