News Update :
Home » » இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 3 மடங்கு அதிக ஓட்டுக்களை பெற்றது எப்படி?

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 3 மடங்கு அதிக ஓட்டுக்களை பெற்றது எப்படி?

Penulis : karthik on Thursday, 22 March 2012 | 08:44

 
 
 
சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. 8-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சங்கரன் கோவில் தொகுதி அ.தி.மு.க. கோட்டை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சங்கரன்கோவில் தொகுதியில் 1957-ம் ஆண்டு நடந்த முதல் பொது தேர்தல் தொடங்கி தற்போது நடந்த தேர்தல் வரை 14 தேர்தல்களில் ஆரம்ப காலத்தில் மட்டும் காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்து அ.தி.மு.க. உருவாகாத கழகம் ஒன்றுபட்டு இருந்த போது தி.மு.க. 2 முறையும், அ.தி.மு.க. தோன்றிய பிறகு தி.மு.க. 2 முறையும் ஆக மொத்தம் 4 முறை வெற்றி பெற்றுள்ளது.
 
எம்.ஜி.ஆர். இருந்த போது 2 முறையும், ஜெயலலிதா தலைமை ஏற்ற பிறகு 6 முறையுமாக மொத்தம் 8 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அதிலும் ஜெயலலிதா தலைமை பொறுப்பு ஏற்ற பிறகு நடந்த அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது.
 
இதில் அ.தி.மு.க.வின் மறைந்த அமைச்சர் கருப்பசாமி மட்டும் தொடர்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.இந்த தொகுதியில் இதற்கு முன்பு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதிகபட்சமாக பெற்ற ஓட்டுகள் 70 ஆயிரத்து 297 தான். ஆனால் இப்போது போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 94 ஆயிரத்து 977 ஓட்டுக்கள் வாங்கி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
 
தி.மு.க.வுக்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 61 ஆயிரத்து 902 ஓட்டுகள் கிடைத்தது. ஆனால் இப்போது 26 ஆயிரத்து 220 ஓட்டுக்களாக குறைந்து இருக்கிறது. இது கடந்த தேர்தலைவிட 35 ஆயிரம் ஓட்டுகள் குறைவு.
 
கடந்த தேர்தலில் கருப்பசாமி 11 ஆயிரத்து 395 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது முத்துச் செல்வி 68 ஆயிரத்து 757 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலை விட 5 மடங்கு அதிகம்.
 
1996-ல் ம.தி.மு.க. இந்த தொகுதியில் ஜனதா தளம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டபோது 30 ஆயிரத்து 893 ஓட்டுகள் பெற்றது. 2001-ல் 20 ஆயிரத்து 610 ஓட்டுகள் கிடைத்தது. இப்போது ம.தி.மு.க.வுக்கு 20 ஆயிரத்து 678 ஓட்டுகள் பெற்றுள்ளது.
 
தே.மு.தி.க.வுக்கு 12 ஆயிரத்து 144 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் தே.மு.தி.க. போட்டியிட வில்லை. அதற்கு முன்பு நடந்த தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் 5 ஆயிரத்து 531 ஓட்டுக்கள் பெற்றார். பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் 1,633 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளது.தே.மு.தி.க. இதற்கு முன்பு பெற்றதை விட 6,613 ஓட்டுக்கள் அதிகம் பெற்றுள்ளது. என்றாலும் தனித்து போட்டியிட்டு அ.தி.மு.க.வுக்கு சவாலாக இருப்போம் என்று விஜயகாந்த் கூறி இருந்தார்.
 
ஆனால், தே.மு.தி.க. 4-வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. இதற்கு முன்பு பெற்ற ஓட்டுக்களை விட அதிக ஓட்டுக்களை பெற்று இருக்கிறோம் என்று அவர்கள் சொன்னாலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி பெற முடிந்தது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியது உண்மையாகி இருக்கிறது.
 
முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் சொந்த கிராமமான புளியம் பட்டியில் 3 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் அ.தி.மு.க.வுக்கே அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இங்கு அ.தி.மு.க. 10,984 ஓட்டுக்களும், தி.மு.க.வுக்கு 450 ஓட்டுக்களும் கிடைத்தன. தே.மு.தி.க.வுக்கு 218 ஓட்டுக்களையும், ம.தி.மு.க. 83 ஓட்டுக்களையும் பெற்றுள்ளன.
 
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க.வுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன. இங்கு அமைக்கப்பட்டிருந்த 3 ஓட்டுச்சாவடிகளில் ம.தி.மு.க. 1,158 வாக்குகளைப் பெற்றது. அ.தி.மு.க.வுக்கு 761 ஓட்டுக்களும், தி.மு.க.வுக்கு 110 ஓட்டுக்களும், தே.மு. தி.க.வுக்கு 42 ஓட்டுக்களும் கிடைத்துள்ளன.
 
பஸ் கட்டணம், பால் விலை உயர்வு, மின்வெட்டு என்று பல்வேறு பிரச்சினைகளைச் சொல்லி எதிர்க் கட்சிகள் ஓட்டு கேட்டன. ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மின்வெட்டுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரசாரம் செய்தார்.
 
அ.தி.மு.க. வெற்றி பெற்றால் சங்கரன்கோவில் மக்கள் சங்கடம் இல்லாமல் வாழ அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்று கூறினார். அ.தி.மு.க.வுக்கு சோதனையான காலத்திலும் சங்கரன்கோவில் மக்கள் வாக்களித்தனர். எப்போதும் அ.தி.மு.க.வின் பக்கம் இருந்து சங்கரன்கோவில் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
 
மற்ற கட்சிகளை 'டெபாசிட்' இழக்கச் செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தின் போது கேட்டுக் கொண்டார். அது அப்படியே நிறைவேறி இருக்கிறது.
 
இதற்கு முதல்-அமைச்சரின் வாக்குறுதியை இந்த தொகுதி மக்கள் நம்புவதே காரணம் என்று சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இடைத்தேர்தலில் எதிர்க் கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டால் பெரிய அளவில் பயன் இருக்காது. ஆனால் ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் தேவையான திட்டங்கள் நிறைவேறும், அ.தி.மு.க. வேட்பாளரிடம் சொல்லி தொகுதிக்கு வேண்டியதை பெறலாம் என்று வாக்காளர்கள் கருதியதால்தான் அ.தி.மு.க.வுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்க காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால், அ.தி.மு.க. வேட்பாளர் மட்டுமே ஒரு பெண் வேட்பாளர். மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் ஆண் வேட்பாளர்கள். இதனால் பெண்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு ஏற்பட்டுவிட்டது.
 
அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி ஏற்கனவே நகர்மன்ற தலைவியாக இருந்து அறிமுகமானவர். அவரது தந்தையும் அ.தி. மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. இதனால் அவரது குடும்ப ஓட்டுக்களும் அவரது குடும்பத்தினருக்குள்ள செல்வாக்கும் கூடுதல் பலத்தை கொடுத்தன.
 
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தி.மு.க.வை விட 3 மடங்கு அதிகமாக ஓட்டுக்களை பெற்று இருக்கிறார். தாழ்த்தப்பட்ட மற்றும் பெரும்பாலான பிரிவினர் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து உள்ளனர். கலிங்கப்பட்டி தவிர மற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அ.தி.மு.க.வுக்கே அதிகமாக ஓட்டுக்கள் கிடைத்து இருக்கின்றன.
 
அரசு திட்டங்கள் தொகுதி மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வினர் ஒரு மாதத்துக்கு முன்பே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைத்த வியூகத்தின்படி 32 அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் தொகுதியில் முகாமிட்டு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார்கள்.
 
மற்ற கட்சிகள் தேர்தல் பணியை தொடங்குவதற்குள் அ.தி.மு.க.வினர் பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பணியை நிறைவு செய்து விட்டனர்.
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சுற்றுப் பயணமும், வாக்குறுதிகளும் சங்கரன்கோவில் மக்களுக்கு முழு நம்பிக்கையை கொடுத்ததால் அது அ.தி.மு.க. அமோக வெற்றியை அள்ள வழி வகுத்தது என்றே அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger