சென்னையில் 6,500 விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: இந்து முன்னணி சார்பில் 23 ந்தேதி 3 இடத்தில் ஊர்வலம்

சென்னை, செப். 20-
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மொத்தம் 6,500 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன.
வருகிற 22-ந்தேதி முதல் இந்த சிலைகள் கடலில் எடுத்துச் சென்று கரைக்கப்படுகின்றன. இந்து முன்னணி சார்பில் வருகிற 23-ந்தேதி சென்னையில் 3 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்படுகிறது.
திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டை பிள்ளையார் கோவில் அருகில் இருந்து மதியம் 1.30 மணி அளவில் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுகிறது. சுமார் 500 சிலைகள் இங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.
இதில் இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகர பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் 3 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த வழியாக தடையை மீறி ஐஸ்அவுஸ் மசூதி வழியாக ஊர்வலம் செல்ல முயன்று ராமகோபாலன் கைதாவார். பின்னர் பாரதி சாலை வழியாக ஊர்வல பாதை திருப்பி விடப்படும்.
இந்த ஆண்டும் வழக்கம் போல இந்து முன்னணி ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இருந்து, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயகுமார் தலைமையில் இன்னொரு ஊர்வலமும் நடத்தப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு வழியாக கடற்கரை சாலையை சென்றடையும்.
இந்த ஊர்வலத்தில் 850 சிலைகளுடன் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். பாரிமுனை முத்துசாமி பாலம் அருகில் இருந்து இந்து முன்னணி மாநில இளைஞர் அணி பிரமுகர் பொன்னையா தலைமையில் மதியம் 2.30 மணிக்கு 3-வது ஊர்வலம் புறப்படும். இதில் 1,600 சிலைகளுடன் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.
இதேபோல சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. விநாயகர் சிலை ஊர்வலம் 23, 24, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் ஊர்வலத்திலும் ஆயிரக்கணக்கான சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.
எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய 5 இடங்களில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள 6,500 சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Post a Comment