இவர், தூத்துக்குடி, ஆவுடையாபுரம் ஆட்டோ டிரைவர் மகேஷ், 27, என்பவரின், குடும்ப டாக்டராகவும் இருந்தார். மகேஷின் கர்ப்பிணி மனைவி நித்யா, 25, மாதாந்திர பரிசோதனைக்கு, இவரிடம் தான் வருவது வழக்கம்.
ஆறு மாத கர்ப்பிணியான நித்யாவிற்கு, டிச.,30ம் தேதி திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து நித்யா, "சுபம்' கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் சேதுலட்சுமி, கருவிலுள்ள குழந்தை இறந்து விட்டதாகவும், அதை ஆபரேஷன் செய்து அகற்றாவிட்டால், நித்யா உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும், மகேஷிடம் கூறியுள்ளார்.மகேஷ் சம்மதத்தின் பேரில், அன்று மதியம் நித்யாவுக்கு, ஆபரேஷன் செய்த சேதுலட்சுமி, கருவிலிருந்து இறந்த குழந்தையை அகற்றினார். ஆனால், சிறிது நேரத்தில், நித்யாவின் உடல்நிலை, மிகவும் மோசமானது.
இதையடுத்து, சேதுலட்சுமி பரிந்துரைப்படி அவர், தூத்துக்குடியிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நித்யா, அன்றிரவே இறந்து போனார். இதையடுத்து, மனைவிக்கு இறுதிச் சடங்கை முடித்து, டாக்டர் சேதுலட்சுமியை சந்தித்த, மகேஷ் குழந்தை, மனைவி இறந்ததற்கு முறையான சிகிச்சையளிக்காதது தான் காரணம் எனக் கூறி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர் சேதுலட்சுமியை மிரட்டியதாக, டாக்டர் தரப்பில் தென்பாகம் போலீசில் புகார் கூறப்பட்டது.
குத்திக்கொலை:நேற்று முன்தினம் இரவு, மது குடித்துவிட்டு, மகேஷ், தனது நண்பர்கள் குருமுத்து, 19, ராஜா, 27, அப்பாஸ், 27 ஆகியோருடன், 10 மணிக்கு சுபம், "கிளினிக்'கிற்கு சென்றார். மனைவி, குழந்தை இறந்தது தொடர்பாக, அங்கிருந்த டாக்டர் சேதுலட்சுமியுடன், மகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் மகேஷ், நண்பர்களோடு சேர்ந்து சேதுலட்சுமியை, சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், கழுத்து, தலை, உடலில் படுகாயமடைந்த சேதுலட்சுமி, அங்கேயே இறந்தார். கிளினிக் பணியாளர் வள்ளிக்கும், 38, கத்திக்குத்து விழுந்தது.
அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்:டாக்டர் சேதுலட்சுமி படுகொலையை கண்டித்தும், அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும், தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் நேற்று காலை கறுப்பு பேட்ஜ் அணிந்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்தனர். அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் டி.ஆர்.ஓ., எஸ்.பி.,ராஜேந்திரன், ஆர்.டி.ஓ., லதா பேச்சு நடத்தினர்.
சேதுலட்சுமியை கொலை செய்த குருமுத்து, ராஜா, அப்பாஸ் ஆகிய மூவரையும் கைது செய்துவிட்டதாகவும், தலைமறைவாக உள்ள மகேஷை உடனடியாக கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். ஆனால், மகேஷை கைது செய்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என, டாக்டர்கள் உறுதியாக தெரிவித்தனர். மாவட்டத்தின், பிற ஊர்களிலுள்ள அரசு மருத்துவமனைகள், 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், நோயாளிகள் அவதிப்பட்டனர்.
வேலைநிறுத்தம் வாபஸ்: இதனிடையே, மதியம் 1.30 மணிக்கு, மகேஷ் கைது செய்யப்பட்டதாக, எஸ்.பி., டாக்டர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, தங்களது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக, டாக்டர்கள் அறிவித்து, பணிக்குத் திரும்பினர்.எனினும், மாநிலம் முழுதும் அரசு மருத்துவர்கள் அனைவரும், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.அவசர சிகிச்சை தவிர, வேறு எந்த சிகிச்சையும் செய்யப் போவதில்லை எனக் கூறியுள்ளனர்.
Post a Comment