சென்னை: கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஆலோசனை கேட்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கடிதம் மூலம் விவாதித்து வருகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக உள்ளார்.
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கும் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஆர். நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது,
பிரதமர் மன்மோகன் சிங் 3 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியதும் கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்படும்.
அந்த குழுவில் சுற்றுச்சூழல், அணு சக்தி, ஓசோன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் பிரபல விஞ்ஞானிகள் இடம்பெறுவார்கள். அவர்களின் பரிந்துரைகள் தவிர கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஆலோசனை கேட்கப்படும் என்றார்.
கலாமை 'பாஜக ஆள்' என்ற ரீதியில்தான் பார்த்து வருகிறது காங்கிரஸ். அவரை எப்போதுமே ஒதுக்கியே வைத்திருப்பது காங்கிரஸின் வழக்கமாகும். இந்த நிலையில் தற்போது கலாமிடம் ஆலோசனை கேட்கப்படும் என்று காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment