டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், முதல்வரின் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டது. அந்த பைலை, வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதன் பின்னர் தான் சசிகலாவின் ஆதரவர்களாக வலம் வந்த அதிகாரிகள், ஒவ்வொருவராக, "கழற்றி' விடப்பட்டுகின்றனர்.
"எம்.ஜி.ஆர்., கூட இந்தளவிற்கு தனி மெஜாரிட்டியில் ஜெயிக்கலைங்க... இந்தம்மாவிடம் (ஜெயலலிதா) பொதுமக்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க' என்ற பேச்சு, தமிழகத்தின் அடிமட்ட அரசியல் தொண்டனிடம் இருந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பேசப்பட்டது.
முதல்வரின் நிழலாக பின் தொடரும் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தில் நடப்பது எங்கள் ஆட்சி' என்ற தோரணையில் தலைமைச் செயலகத்தில் வலம் வந்தனர்.தற்போது நீக்கப்பட்ட, 14 பேரில் ராகவன் என்பவர், தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்தில், சி.எம்.டி.ஏ., பிரின்சிபல் செக்ரடரி தயானந்த கட்காரியை போனில் அழைத்து, "நாங்கள் சொல்லும் பைலில் கையெழுத்து போடா விட்டால் நடப்பதே வேறு' என மிரட்டியுள்ளார்.
அந்த நபர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை என, தலையிட்டு, கடைசியாக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையிலும் தலையை நீட்டினார். "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் ஆசியுடன், கடந்த ஆட்சியில் சென்னையில் பணியாற்றி வந்த, "ஜிம் பாடி பில்டர்' ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கார்டன் அதிகார நபரை பிடித்தார்.அடுத்த சில நாட்களில் அந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, மேற்கு மண்டலத்தில் உள்ள வளமான மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். இது போன்ற ஏகப்பட்ட தலையீடுகள், போலீஸ் துறையில் அரங்கேறின.
கார்டன் அதிகார மையத்தினரால் நடத்தப்படும் வசூல் வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து ரகசிய, "பைல்' முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அந்த பைலை முதல்வரின் பார்வையில் படாமல் கார்டனில் உள்ள சிலர் மறைத்து விட்டனர்.டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், ஒரு மாதத்திற்கும் மேலாக கார்டனில் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இம்மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை, அந்த பைலை ஜெயலலிதா படித்துள்ளார்.அதில், சசிகலா மற்றும் அவரது வகையறாக்கள் ஒவ்வொருவரை பற்றியும், வசூல் வேட்டை பற்றியும் விலாவாரியாக, "புட்டு புட்டு' வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கார்டன் அதிகார மையத்தினரால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் தகவல், நியாயமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் முதல்வரிடம் தயக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின் தான், முதல்வர் சாட்டையை சுழற்றினார். தலைமைச் செயலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, சிறப்பு திட்ட செயலரான பன்னீர்செல்வம் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.அவர், சசிகலாவின் கணவர் நடராஜனின் தீவிர விசுவாசி. பன்னீர்செல்வம், ஐ.ஏ.எஸ்., ஆனதற்கு, நடராஜன் உதவியதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான, திருமலைச்சாமி, கார்டனில் இருந்து விரட்டப்பட்டார்.இவர், கார்டன் அதிகார மையத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கார்டனில் நடக்கும் விஷயங்களை கேட்டு முகம் சிவந்த ஜெயலலிதா, திருமலைச்சாமியிடம் நேரடியாக விசாரித்த போது, பல தகவல்கள் முதல்வரை அதிர்ச்சியடை செய்தன.திருமலைச்சாமியின் வாக்கு மூலத்தை, அமைச்சர்களை நேரில் அழைத்து விசாரித்து, நூறு சதவீதம் உறுதி செய்தார் ஜெயலலிதா. இனிமேலும் தாமதித்தால் எல்லாம் வீணாகிப் போய்விடும் என்ற எண்ணத்தில், கழக தலைமைக் செயற்குழு குழு உறுப்பினர் சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் உட்பட, 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், மற்ற பொறுப்புகளில் இருந்து ஜெயலலிதா விடுவித்து உத்தரவிட்டார்.
விடுமுறையில் ஓட்டம்:கார்டன் அதிகார மையத்திற்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் பலர், செய்தித் துறையில் பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள், "எம்.என்., - எம்.ஆர்.,' வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து வந்துள்ளனர். நேற்று, ஜெ., வின் அதிரடியால், செய்தித் துறையில் பணியாற்றி வந்த ஆதரவு அதிகாரிகள் சிலர், மொபைல் போனை, "ஆப்' செய்து விட்டு, "எஸ்கேப்' ஆகி விட்டனர். முதல்வரின், "ஹிட் லிஸ்டில்' உள்ளவர்களில் சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Post a Comment