News Update :
Home » » கிளீனர் ஆன கால்பந்தாட்ட வீரர்கள் !

கிளீனர் ஆன கால்பந்தாட்ட வீரர்கள் !

Penulis : karthik on Friday, 2 December 2011 | 04:12

 


இந்தியாவில் ஒருபுறம் கிரிக்கெட் விளையாட்டு வீர்ர்களுக்கு பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. கிரிக்கெட் வாரியம், ஸ்பான்ஸர்கள் இவை தவிர, ஏதேனும் பெரிய போட்டிகளில் வென்றாலோ அல்லது தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்தினாலோ முறியடித்தாலோ, அந்தந்த மாநில அரசு, தவிர மத்திய அரசு என வீர்ர்களை பணக்ரீடை செய்கின்றன.

சமீபத்தில் பம்பாயில் நிகழ்ந்த டெஸ்ட் போட்டியில், டெண்டுல்கர் தனது நூறாவது சதத்தை நிறைவு செய்தாரானால் அவருக்கு நூறு தங்கக் காசுகள் வழங்கப்படுமென அகில இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்திருந்தது. இப்படி கொட்டும் பண மழை எல்லாம் போதாதென்பது போல சூதாட்டங்களில் வேறு ஈடுபட்டு கிரிக்கெட் வீர்ர்கள் அவ்வப்போது மாட்டிக் கொள்வதும் நிகழ்வதுண்டு. முன்னாள் கேப்டன் அஸாருதீன், நட்சத்திர வீரர் ஜடேஜா போன்றோர்கள் உதாரணம்.


இவை ஒருபுறமிருக்க இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கள் எங்கிருக்கின்றன என பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு தேடினாலும் அகப்படாத அவலநிலை. இன்றைய தலைமுறையினருக்கு இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது தெரிந்திருக்க நியாயமில்லை, தெரியவில்லை என்று குற்றமும் சொல்ல முடியாது. இதன் கதியே இப்படியென்றால் கால்பந்தாட்டம் எம்மாத்திரம்?

ஆளுங்கட்சித் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் என கட்சி பேதமின்றி ஏதேனும் ஒரு கட்சித் தலைவர் ஏதேனும் ஒரு ஜில்லா கிரிக்கெட் சம்மேளனத்திற்கோ, அல்லது மாநில கிரிக்கெட் சம்மேளனத்திற்கோ தலைமை வகித்துக் கொண்டிருப்பார். எதுவுமே கிடைக்காவிடில், கூடுவாஞ்சேரி கிரிக்கெட் குழுவின் தலைவராகவேனும் பொறுப்பு வகித்துக் கொண்டிருப்பார். ஆனால் கால்பந்து, ஹாக்கி சம்மேளனத்திற்கு ஒரு வார்டு மெம்பர் கூட தலைவர் பொறுப்புக்கு வரத் துணிய மாட்டார். காரணம் அங்கு செல்லாத ஓட்டைக் காலணாவைக் கூடப் பார்க்க முடியாது.

இம்மாதிரியான பணப் பிரச்சனை மற்றும் ஸ்பான்ஸர் பிரச்சனைகளால் இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கள் எதுவுமே சோபிக்கவில்லை. 120 கோடி ஜனத்தொகையுள்ள ஒரு நாட்டில் அதிகபட்சம் ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்தாலே, ஒரு மாதத்திற்கு தலைப்புச் செய்தியாகின்ற கேவலம். இதையும் விட கேவலமான ஒரு நிகழ்வு மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

கேவலம், அவமானம்! இதற்கும் கீழான வார்த்தைகள் கிடைக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அவ்வணி இந்தியாவுடன் மோதும் நான்காவது சர்வதேச ஒரு தின கிரிக்கெட் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம் ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மூன்றாண்டுகளிக்கு இம்மைதானத்தில் நிகழவிருக்கும் சர்வதேசப் போட்டி என்பதால் மைதானத்தைச் சுத்தம் செய்யும் நிமித்தம், உள்ளூர் டிவிஷன் கால்பந்தாட்ட அணியினரை மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதில் என்னவொரு அதிர்ச்சி என்றால், இவ்வணியில் உள்ள சுமார் 7 பேர், மாநில அணி வீரர்களாவர். இதுவெல்லாம் கூட அதிர்ச்சி இல்லை, இனி வரப் போவதுதான் அதிர்ச்சி. சுமார் 26,000 இருக்கைகள் கொண்ட மைதானத்தில், ஒவ்வொரு இருக்கைக்கும் சுத்தம் செய்ய ரூபாய் 2.75 வீதம் கூலி கொடுக்கப்படுகிறது என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். ஒரு கப் டீ கூட இந்த விலைக்குக் கிடைக்காத நிலையில், ஒரு கால்பந்தாட்டக் குழுவை, அதிலும் மாநில வீர்ர்களைக் கொண்ட ஒரு குழுவை 2 ரூபாய் சொச்சத்திற்கு கூலியாட்களாக அமர்த்தியிருக்கிறது மத்தியப் பிரதேச கிரிக்கெட் சம்மேளனம். இது அவ்வணியினரைக் கேவலப் படுத்தும் செயல் அல்ல, ஒட்டு மொத்த கால்பந்தாட்ட்த்தையே கேலிக்குள்ளாக்கும் செயல். இந்தியாவைத் தவிர வேறு எங்குமே நடவாத செயல்.

இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, எங்களுடைய கிழிந்த ஷூக்களுக்குப் பதிலாக புதிய ஷூக்களும், இதர விளையாட்டு சாதனங்களையும் வாங்குவோம் என்கிறார் இந்த கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர்.

இந்தியாவில் கால்பந்தாட்டம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. இவ்விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல பலம் பொருந்திய அமைப்போ, பணபலமோ நம்மிடம் இல்லை. இதனால் இவ்வாறு செய்யும் வேலைகளின் மூலமாக்க் கிடைக்கும் வருவாயைக் கொண்டு எங்கள் விளையாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம் என்கிறார் தேஜ் செளஹான் எனும் கால்பந்தாட்ட வீரர்.

மத்திய அரசாங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சகம் என்று ஒன்று இருப்பதாகக் கேள்வி. அந்த அமைச்சகம் விளையாட்டுக்களை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டாலும் கூட பரவாயில்லை; ஒரு விளையாட்டையும், அதன் வீரர்களையும் இவ்வளவு கீழான நிலைக்குத் தள்ளாமலிருக்கவேனும் ஆவன செய்ய வேண்டும்.

சச்சினுக்கு ஒரு வேண்டுகோள்: 100 அடித்த பிறகு ஒரு 100 ரூபாயை கால்பந்தாட்டதுக்கு நிதி உதவியாக தர வேண்டும்.

கசாப் போன்றவர்களை பாதுகாக்க செலவு செய்யும் அரசு அதில் 10% கால்பந்தாட்டத்திற்கு செலவு செய்யலாம். இந்திய கிரிக்கெட் அணி இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கே விளையட கூடாது. ஞாநி போன்றவர்கள் இதை பற்றி எழுதி சம்பந்தபட்டவர்களுக்கு கொண்டு போக வேண்டும்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger