கூடங்குளம் பிரச்சனையை முன்வைத்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும் என போராட்டகுழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கூடங்குளத்தில் இன்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில்,
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக அணுசக்தி துறையினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசி வருகின்றனர். அணுமின் நிலையத்தில் டிசம்பர் மாதம் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணுமின் நிலைய அதிகாரிகள் முன்பு தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது நவம்பரில் மின் உற்பத்தி தொடங்கும் என அணு சக்தி ஆணைய தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறுகிறார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மத்திய அரசும் சரி, அணுமின் நிலைய அதிகாரிகளும் சரி தெளிவான நிலையில் இல்லை. மக்களின் உயிர் போராட்ட பிரச்சனையில் பொறுப்பற்ற முறையில் பேசுவது வேதனைக்குரியது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையும் பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்ததையும் நாங்கள் வரவேற்கிறோம்.
''முதல்வர் காப்பாற்றுவார்-திமுக செயல்பட வேண்டும்''
எங்களை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில் திமுகவும் இந்த விஷயத்தில் செயல்பட வேண்டும். தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி்முக வாபஸ் பெற வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். அந்தக் குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது. அணு சக்திக்கு ஆதரவானவர்கள் எப்படி மக்கள் நலன் குறித்து சிந்திப்பார்கள் என்றார்.
Post a Comment