இலங்கையில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தலில், அதிபர் ராஜபக்சேயின் ஆலோசகர் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் எம்.பி. ஒருவர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இலங்கை முழுவதும் இருந்து 420 உறுப்பினர்களை 4 ஆண்டுகளுக்கு தேர்ந்து எடுக்கும் உள்ளாட்சி தேர்தல், கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுந்திரா கட்சி, கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
நேற்று வடக்கு கொழும்பு அருகே உள்ள கோதிகா வத்தா என்ற இடத்தில் உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையொட்டி அதிபர் ராஜபக்சேயின் ஆலோசகரும், அவரது கட்சியின் முன்னாள் வக்கீலுமான பரதா லக்ஷ்மன் பிரேம சந்திரா அங்கு சென்றார்.
அப்போது அதிபர் கட்சி தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து எதிர் கட்சி தொண்டர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் குண்டு பாய்ந்து ராஜபக்சேயின் ஆலோசகர் இறந்தார். அவரது மெய்காப்பாளர், மற்றும் 2 தொண்டர்களும் உயிர் இழந்தனர்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் டுமிந்தா சில்வாவின் தலையில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் ஆபத்தான நிலையில், கொழும்பு ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவரைத்தவிர மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவை போலீசார் அமல் படுத்தினார்கள். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
நேற்று நடந்த ஊராட்சி தேர்தலில், இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிபர் ராஜபக்சேயின் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. இந்த தேர்தலுக்கு பின் ஒரு ஆண்டு கழித்து உள்ளாட்சி தேர்தல் நடந்து இருக்கிறது.
இந்த ஒரு ஆண்டு காலத்தில் அதிபர் ராஜபக்சேயின் செல்வாக்கு உயர்ந்ததா? சரிந்ததா? என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
home
Home
Post a Comment