News Update :
Powered by Blogger.

ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் உள்ளது- இல. கணேசன்

Penulis : karthik on Thursday, 29 December 2011 | 08:19

Thursday, 29 December 2011

 
 
 
இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சியினர்தான் அதிக கறுப்பு பணம் வைத்திருக்கின்றனர் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
 
ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது என்று ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்த கருத்துக்கு அவர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
 
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பவர்களுக்காக ரஜினிகாந்த் தனது திருமண மண்டபத்தை இலவசமாக அளித்திருந்தார். இது கருத்து தெரிவித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,
 
'அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது'' என கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பதிலடி தரும் வகையில் தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசியுள்ளார்.
 
புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துக் கூறுகையில்,
 
ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்துக்கு இலவசமாக மண்டபம் வழங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தான் நிறைய கறுப்புப் பணம் வைத்துள்ளார் என, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி, ரஜினிகாந்த் தான் முடிவெடுக்க வேண்டும்.
 
காங்கிசாரிடம் அதிக கருப்பு பணம்
 
அதேசமயம், இளங்கோவன் இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சி தான், மத்தியில் ஆட்சி நடத்துகிறது.
 
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, "அவர் வைத்திருக்கிறார், இவர் வைத்திருக்கிறார்' என, இளங்கோவன் புலம்புவது ஏன்? காரணம், காங்கிரஸ்காரர்கள் தான், நாட்டிலேயே அதிக கறுப்புப் பணம் வைத்துள்ளனர். அதனால் தான், தங்களிடம் முதலீடு செய்திருப்போரின் பட்டியலை வெளியிட சுவிஸ் வங்கிகளே தயாராக உள்ளபோதும், காங்கிரஸ் அரசு தயங்குகிறது என்றார் அவர்.



comments | | Read More...

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

 
 
 
 
 
 
மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் திங்கட்கிழமை தொடங்கியது.
 
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கோவன் 68 ரன்களும், பாண்டிங் 62 ரன்களும், சிடில் 41 ரன்களும் எடுத்தனர்.
 
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி 61 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
 
தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடத் துவங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் ரன் எடுக்க முடியாமல் திணறியது. உமேஷ் யாதவின் வேகப்பந்து வீச்சை சாமளிக்க முடியாமல் தனது மூன்று விக்கெட்டுகளை அவரது பந்து வீச்சில் இழந்தது.
 
துவக்கத்தில் ஆஸி. அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நின்றாலும், அதன் பிறகு ஜோடி சேர்ந்த பாண்டிங்கும் ஹஸ்ஸியும் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அந்த அணியின் ரன்கள் மெதுவாக உயர்ந்தது.
 
சிறப்பாக ஆடிய பாண்டிங் முதல் இன்னிங்ஸைப் போலவே இந்த இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் இருந்த ஹஸ்ஸி இந்த இன்னிங்ஸில் தன் பங்கிற்கு அரை சதம் அடித்து அசத்தினார்.
 
சிறப்பாக விளையாடிய பாண்டிங் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
 
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. அணி 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. ஹஸ்ஸி 79 ரன்களுடனும், பேட்டின்சன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 240 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ஹஸ்ஸி 89 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோராகும்.
 
இன்னும் இரண்டு நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே ஆட்டம் கண்டது.
 
சேவாக் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹில்பெனாஸ் பந்தில் ஹஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் சரியாக விளையாடாத காம்பீர் இந்த முறையும் சொதப்பினார். அவர் 13 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
 
அதன்பிறகு ஜோடி சேர்ந்த டிராவிட்-டெண்டுல்கர் ஜோடியும் நீடிக்கவில்லை. டிராவிட் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து லட்சுமணன் 1 ரன்னிலும், கோக்லி ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
 
இரண்டாவது இன்னிங்ஸிலாவது தனது 100-வது சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட டெண்டுல்கரும் 34 ரன்கள் எடுத்திருந்தபோது சிடில் பந்து வீச்சில் ஹஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
ஒரு கட்டத்தில் இந்திய அணி 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது. இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும், அஸ்வினும் நிலைத்து நின்று பொறுமையாக விளையாடினர்.
 
ஆனால் அவர்களது கூட்டணியும் நிலைக்கவில்லை. கேப்டன் தோனி 23 ரன்களிலும், அஸ்வின் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க, டெயிலெண்டர்களான ஜாகீர்கான் 13 ரன்களிலும், உமேஷ் யாதவ் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 169 ரன்களில் முடிவுக்கு வந்தது.
 
இதனால் 122 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
 
ஆஸி. அணி சார்பில் பேட்டின்சன் 4 விக்கெட்டுகளையும், பீட்டர் சிடில் மூன்று விக்கெட்டுகளையும், ஹில்பெனாஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு உறுதுணையாயிருந்தனர்.
 
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ஜேம்ஸ் பேட்டின்சன் தேர்வு செய்யப்பட்டார்.
 
இதனால் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஆஸி. அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் வரும் ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் நடைபெற இருக்கிறது.
 
இந்த 2011- ம் ஆண்டில் தான் விளையாடிய கடைசி போட்டியை இந்திய அணி தோல்வியோடு முடித்திருக்கிறது. புத்தாண்டிலாவது இந்திய அணி வெற்றியோடு தொடங்க வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.



comments | | Read More...

4 ஆண்களை ஏமாற்றி திருமணம்: போலீஸ் உதவியுடன் தப்பிய மோசடி பெண் மணிமேகலை ?

 
 
 
 
 
பொள்ளாச்சியை சேர்ந்த மணிமேகலை (25) என்ற பெண் கடந்த 4 வருடங்களில் 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மணிமேகலை திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம் அருகே உள்ள கடத்துரை சேர்ந்த சதிஷ் என்பவரை திருமணம் செய்தார்.
 
சதீசை பிரிந்த பின் மானூரை சேர்ந்த சசியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் 6 மாதமாக கணவன் - மனைவி போல் வாழ்ந்து வந்தனர். சசியால் மணிமேகலை ஊதாரி செலவுக்கு பணம் கொடுக்க முடியாததால் இருவரும் பிரிந்தனர்.
 
பின்னர் 3 -வதாக பொள்ளாச்சியை சேர்ந்த மாற்றுத் திறனாளி ரத்தின குமாரை மணிமேகலை திருமணம் செய்தார். ரத்தின குமாருக்கு சொந்தமான 10 செண்ட் நிலத்தை எழுதி வாங்கி விட்டு அவரை விரட்டி விட்டார்.
 
பின்னர் ரத்தின குமாரின் திருணமத்திற்கு சாட்சி கையெழுத்து போட்ட பொள்ளாச்சி குள்ளக்கா பாளையத்தை சேர்ந்த குணசேகரனை மணிமேகலை 4 -வதாக திருமணம் செய்து கொண்டார்.
 
இந்த தகவல் தெரிய வர ஏமாற்றம் அடைந்த ரத்தினகுமார் பொள்ளாச்சி போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து மணிமேகலை, அவரது தாய் வீரம்மாள், தம்பிகள் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
போலீஸ் பிடியில் மணிமேகலை சிக்கி விட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் மணிமேகலை போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
 
அவரை பிடிக்க 7 பேர் கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் மணிமேகலை போலீசாருக்கு தண்ணீர் காட்டி வருகிறார். அவர் இருக்கும் இடத்தை அறிந்து பிடிக்க முயன்றால் அதற்குள் தப்பி ஓடி விடுகிறார். அவருக்கு சில போலீஸ்காரர்களே உதவியாக இருப்பதாக தெரிகிறது.
 
தனிப்படையினர் செல்லும் தகவல்களை முன் கூட்டியே மணிமேகலைக்கு சில போலீசார் தெரிவித்து விடுகிறார்கள். அதனால் அவர் எளிதில் தப்பி சென்று விடுகிறார். இதனை பொள்ளாச்சியை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும் மணிமேகலையை விரைவில் பிடித்து விடுவோம் என அவர் கூறினார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger