Saturday, 17 December 2011

சொந்தநாட்டிலேயே அகதியாக்கப்படும் தமிழன்: கேரளாவிலிருந்து 170 தமிழ் குடும்பங்கள் விரட்டியடிப்பு

 
 
 
கேரளா மாநிலத்தில் இருந்து இதுவரை 170 தமிழர்களின் குடும்பங்கள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அடர்ந்த வனப்பகுதி வழியே நடந்து தமிழகம் வந்து சேர்ந்தனர்.
 
முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலை, பாப்பம்பாறை, பாரத்தோடு, கைலாசபாறை, காமாட்சிகுளம், ஆனைக்கல் மெட்டு, தூக்குப்பாலம், நெடுங்கண்டம், பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் மீது அங்கு வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
 
இதனால் தோட்டத்தொழிலாளர்கள் தேவாரம் குதிரைப்பாஞ்சான்மலையின் வழியாக சதுரங்கப்பாறை, சாக்குலூத்து மெட்டு மலையடிவார பகுதிகளில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து தமிழகத்துக்கு வருகின்றனர். ஏற்கனவே 70 குடும்பத்தினர் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். கடந்த 3 தினங்களாக 170 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர்.
 
தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவின் பேரில் அவர்களை இங்குள்ள பள்ளிகளில் தங்க வைத்து மதிய உணவு, பால், ரொட்டி, போன்றவைகளை வருவாய்த்துறையினர் வழங்கி வருகிறார்கள். இவர்களுக்காக அந்த பள்ளியிலேயே சமையலும் செய்யப்படுகின்றது. மேலும் அவர்களின் விருப்பத்துக்கிணங்க சொந்த ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
 
இவர்களில் வீடுகள் இல்லாதவர்கள் பற்றி வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுத்து தனியார் மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்து உள்ளனர். கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபநிலை குறித்து கேரளாவில் இருந்து வெளியேறி தேவாரத்திற்கு வந்தவர்கள் கூறியதாவது:
 
அழகுராணி: (உடுப்பஞ்சோலை), கேரளாவில் நாங்கள் பல ஆண்டுகளாக தங்கி எஸ்டேட்களில் வேலை செய்து வருகிறோம். இரவு நேரங்களில் குடிபோதையில் வரும் கேரளாவைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினார்கள். இதனால் நான் பயந்தபடி இரவு நேரத்தில் யானைகளின் பயத்திற்கு இடையே எனது சிறு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தேன்.
 
அபிலாஷ், அம்மு: (செம்மனார் எஸ்டேட்) : நாங்கள் கேரளாவில் உள்ள பள்ளிகளில்தான் படிக்கிறோம். முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையினால் எங்களை பள்ளிகளிலேயே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர். கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட நெருக்கடியினாலும், எங்களது குடும்பத்தினரை மலையாளிகள் கும்பல் மிரட்டியதாலும் அதிகாலையில் எழுந்து நடந்து வந்தோம். இதுபோன்ற பரிதாபநிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது.
 
மணிகண்டன்(உடும்பன்சோலை): எனக்கு கேரளாவில் வாக்குரிமை உள்ளது. குடும்பத்தோடு எஸ்டேட் கூலித்தொழிலளியாக வேலை பார்க்கிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு பின்பு இங்குள்ள யூனியன்களில் கூட தமிழர்கள் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. கேரளாவை சேர்ந்தவர்கள் எங்களை விரட்டும் நோக்கத்தோடு திட்டினார்கள். எதற்கு பிரச்சினை என்று கிளம்பி வந்துவிட்டோம். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

 


இணையதளங்களுக்கு தணிக்கை இல்லை- மத்திய அரசு

 
 
 
சமூக இணைய தளங்களை தணிக்கை செய்யும் எண்ணமில்லை என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
 
இணைய தளங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணைய தள நிறுவங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தலைமை தாங்கினார்.
 
கூட்டம் முடிந்ததும், கபில்சிபல் நிருபர்களிடம் கூறுகையில், "இணைய தள குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க தேவையான சட்டங்கள் தற்போது அமலில் இருக்கிறது. எனவே புதிய சட்டம் கொண்டு வர தேவை இல்லை'' என்றார்.
 
"இந்திய மக்களுக்கு பேச்சுரிமை போல எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமையும் இருக்கிறது. அதன்படி இணையதளங்களில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை தடை செய்ய முடியாது. இதற்காக இணைய தளத்தில் சென்சார் கொண்டு வரும் எண்ணம் அரசுக்கு இல்லை'' என்று, மத்திய தொலை தொடர்புத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.



'நண்பன்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்ப்பு.. வருகிறார் அமீர்கான்?

 
 
 
ஷங்கர் இயக்கத்தில் விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடித்துள்ள நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 23-ம் தேதி கோவையில் நடக்கிறது.
 
கோவையில் நடக்கும் முதல் பிரமாண்ட சினிமா இசை வெளியீட்டு விழா இதுவே.
 
இந்த விழாவுக்கு நண்பன் படத்தின் ஒரிஜினல் கதையான 3 இடியட்ஸின் நாயகன் அமீர்கான் வருவார் என்று கூறப்படுகிறது.
 
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள நண்பன் பொங்கல் ஸ்பெஷலாக களமிறங்குகிறது.
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏழாம் அறிவில் சொதப்பிவிட்டதால், இந்தப் படத்துக்கு மிக கவனத்துடன் அவர் இசையமைத்திருப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.
 
இந்தப் படப் பாடல்களை மேடையில் நேரடியாக தனது குழுவினரை வைத்து வழங்க ஹாரிஸ் ஜெயராஜ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மிகப் பிரமாண்டமாக இந்த விழா நடக்கிறது.
 
3 இடியட்ஸ் படத்தின் ஹீரோ அமீர் கான் இந்த விழாவுக்கு வருவார் என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வருகிறது. வருவாரா என்பதை படத்தின் இயக்குநரோ தயாரிப்பாளரோ உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



விஜயகாந்த் எப்படிச் சொல்லலாம்- பாஜக பாய்ச்சல்

 
 
 
 
 
 
தமிழகத்திலிருந்து யாரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் போகக் கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பது தவறு. சபரிமலைக் கோவிலில் நமக்குள்ள உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில்,
 
முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் போராட்டம் நடத்துவதற்கு தேனி சென்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்கு சென்று சபரிமலையில் தான் ஐயப்பனை தரிசிக்க வேண்டுமா? தமிழ்நாட்டில் சுவாமி ஐயப்பன் கோவில்கள் கட்டி இங்கேயே தரிசனம் நடத்தலாம். அங்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்பது போல் பேசியுள்ளார்.
 
விஜயகாந்த்தின் இந்தப் பேச்சு, கேரளத்தில் ஐயப்ப பக்தர்களை தாக்குவோர்க்கு சாதகமாகவும் தலைமுறை தலைமுறையாக சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்ற ஐயப்ப பக்தர்களின் உரிமைகளை பறிப்பதாகவும் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
 
விஜயகாந்தின் இந்தப் பேச்சு சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் உரிமை இனி தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு இல்லை என்பது போலவும் அமைந்துள்ளது.
 
எத்தனை பிரச்னைகள் எப்படி நடந்தாலும் கேரள மக்களையும் தமிழக மக்களையும் மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்று எந்த சக்திகள் முயன்றாலும் அவற்றை எல்லாம் முறியடித்து தேச ஒருமையை காக்கக் கூடிய ஒன்றாக தமிழக ஐயப்ப பக்தர்களுடைய சபரிமலை பயணமும் கேரள முருக பக்தர்களின் பழனி பயணமும் தொடர்ந்து நடந்தே தீரும். அதை தடுக்க யார் முயன்றாலும் பாரதிய ஜனதா கட்சி தமிழக மக்களின் முழு ஒத்துழைப்போடு அதனை முறியடித்தே தீரும்.
 
சபரிமலையில் தமிழர்களுக்கு இருக்கும் வழிபடும் உரிமையை விட்டுக் கொடுக்கும் வகையில் பேசியுள்ள விஜயகாந்த், தமிழக மக்களிடமும் குறிப்பாக ஐயப்ப பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.